பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.
வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்_சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
பூச்சித்தொல்லை கொசுக்கள் உள்ளே வருமென்றால், நைலான் வலை போட்டுக்கொள்ளலாம். எந்தத் தவறும் இல்லை. வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.
பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.
காரைக்குடியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தேக்கு மரக்கதவு ஜன்னல்களால் இழைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பணப்பெட்டியை மரத்தாலான பெட்டியில்தான் வைத்து எடுப்பார்கள். பணத்தின் அருமையை அவர்கள் உணர்ந்ததால்தான் அப்படிச் செய்தார்கள்.
பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.
அளவுக்கு மீறி பணம் வந்தாலும் 'சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி' என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன்,மகள்,பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார். அதனால்தான் 'ஈயா பண்டம் தீயாய்க் கெடும்' என்ற முதுமொழியே வந்தது.
உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.
பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 500 ரூபாய் நோட்டாக வையுங்கள்.
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.
பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.(பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.
"பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்.எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்."
No comments:
Post a Comment