Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - கன்னி

வாழ்வின் புதிய இலக்குகளைக் கண்டுபிடித்து முன்னேறும் தன்மை கொண்டு கற்பனையிலும் சிறந்துவிளங்கும் கன்னி ராசிக்காரர்களே....

வரும் குரோதி வருடம் உங்களுக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

ராசிக்கு 10 - ம் இடமான மிதுனத்தில் சந்திரன் நிற்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் சாதனைகள் தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்டு அனைத்துக் காரியங்களையும் சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலம் குறித்து சிந்தித்து அதற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய வேலை, புதிய பதவி, மதிப்பு மரியாதை என இந்த ஆண்டு உங்களுக்குபல பரிசுகளைக் கொண்டிருக்கிறது.

தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று உங்கள் ராசியையும் பார்த்துக்கொண்டு நிற்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவி நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் கார் வாங்கும் யோகம் வாய்க்கும்.

ராசிக்கு 6-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்து உங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவே புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். மழலை வரம் கேட்டவர்களுக்கு இந்த ஆண்டு அது கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நல்ல நிறுவனத்திலிருந்து புதிய வேலைக்கு அழைப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை விரைந்து பைசல் செய்வீர்கள். தெய்வப் பிரார்த்னைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

30.4.24 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. உங்களுடைய தனித்தன்மையை விட்டுவிடாதீர்கள். அதேவேளையில் மறைமுக எதிரிகளால் ஆதாயமும் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் செலவாகிறதே என்று கவலைப்படுவீர்கள்.

1.5.24 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9 - ம் வீட்டில் நுழைவதால் அனைத்திலும் ஒரு தெளிவு பிறக்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் நீங்கும். திடீர் பணவரவு, யோகம் உண்டு. மதிப்பு மரியாதை ஒருபடி உயரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் கணவன் - மனைவிக்குள் தேவையற்ற விவாதங்கள் வந்து செல்லும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

30.12.24 முதல் 28.1.25 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்ரன் 6-ல் மறைவதனால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். மின்னணு சாதனங்கள் மாற்ற வேண்டிவரும். பயணங்களின் போது கவனம் தேவை.

31.5.24 முதல் 11.7.24 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8 - ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் உண்டாக வாய்ப்புண்டு.

வியாபாரம்: தொழில் தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவமிக்க பணியாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் வியாபாரம் அதிகரிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உணவு, ஸ்பெக்குலேஷன், சிமெண்ட், கல்வி கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகம்: உத்தியோகத்தில் தேவையில்லாத அச்ச உணர்வு வந்து போகும். சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற உயர்வும் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

No comments:

Post a Comment