Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 27, 2024

2001க்கு முன் வாங்கிய சொத்துக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா?


மத்திய பட்ஜெட் உரையின்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து, 12.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும்; அதோடு இண்டெக்சேஷன் வாய்ப்பு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், இது 2001க்குப் பிறகு வாங்கப்பட்ட வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், 2001க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்கான மதிப்பை எப்படிக் கணக்கிடுவது; அதற்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா, என்றெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த குழப்பங்களை தீர்க்கும் வகையில், தற்போது 2001க்கு முன்பு வாங்கிய சொத்துகளுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரி தொடர்பாக, ஒரு விளக்கத்தை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

அதிகம்:

கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் வாங்கிய நிலம், கட்டடம் அல்லது இரண்டுக்கும், இண்டெக்சேஷன் கணக்கீடு உண்டு. அன்றைய தேதியில், சொத்தின் வாங்கிய விலையோ அல்லது நியாயமான சந்தை மதிப்போ எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சந்தை மதிப்பு முத்திரைத் தாள் மதிப்புக்கு அதிகமாக இருக்கக் கூடாது. உதாரணமாக, 1990ல் ஒரு சொத்து ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். 2001ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் அதன் முத்திரைத் தாள் மதிப்பு 10 லட்சம் ரூபாய், நியாய மான சந்தை மதிப்பு 12 லட்சம் ரூபாய் என்றும் எடுத்துக் கொள்வோம்.

மதிப்பு:

அந்த சொத்து ஜூலை 23, 2024க்குப் பிறகு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். 2023 ஏப்ரல் 1 அன்று, அந்த சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் (முத்திரைத் தாள் அல்லது நியாயமான சந்தை விலையில் குறைவானதை எடுத்துக்கொள்வோம்) இந்தச் சொத்தின் மதிப்பு 2023 -- 24 ஆண்டில் எவ்வளவு?

தற்போதைய மதிப்பு = 10 லட்சம் X 363/100 = 36.30 லட்சம் ரூபாய். இதுதான் இண்டெக்சேஷன் செய்த பின்னர் உள்ள மதிப்பு.

இதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

ரூ.1 கோடி -- ரூ.36.30 லட்சம் = ரூ.63.70 லட்சம்.

இந்த 63.70 லட்சம் ரூபாய்க்கு, 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கணக்கிட்டால், 12.74 லட்சம் ரூபாய் வரும். இதை அரசுக்கு செலுத்தவேண்டும்.இவ்வாறு, வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment