Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 3, 2024

யுஜிசி நெட் மறுதேர்வு கால அட்டவணை வெளியீடு: கணினி வழியில் ஆக.21-ல் தொடக்கம்


முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் மறுதேர்வுக்குரிய விரிவான கால அட்டவணையை என்டிஏ (NTA) இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை நடத்தப்படும்.


அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 1,205 மையங்களில் ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சத்து 8,580 பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்தன. அதையேற்று யுஜிசி நெட் தகுதித் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதற்கான மறுத்தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து நெட் தேர்வுக்குரிய பாடவாரியான கால அட்டவணையை என்டிஏ இன்று வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 83 பாடங்களும் எந்தெந்த நாட்களில் நடத்தப்படும் என்ற விரிவான விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அதன் விவரங்களை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மையம், ஹால்டிக்கெட் வெளியீடு போன்ற கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ எனும் வலைத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் மூலமாகவோ அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment