Join THAMIZHKADAL WhatsApp Groups
"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’
ஆவிரை என்ற மற்றொரு பெயரும் ஆவாரம்பூவுக்கு உண்டு. தைப்பொங்கல் அன்று காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூ பயன்படுத்துகிறார்கள்.
தாவரவியல் பெயர்
கேசியா ஆரிகுலேடா/சென்னா ஆரிகுலேடா
Cassia auriculata/senna auriculata
தாவர குடும்பம்
Caesalpiniaceae
சீசல்பினேசி
வளரியல்பு மற்றும் பரவல்
புதர்செடியான ஆவாரை, சுமார் 10 அடி உயரம் வரை வளரும். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் பரவி காணப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக உள்ளது. மேலும் தெலுங்கானா மாநிலத்தின் மாநில மலராக ஆவாரம் பூ உள்ளது.
ஆவாரை மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்குப் பயன்படக்கூடியவை. ஆனாலும் பூவுக்கு மருத்துவக் குணம் அதிகம்.
வேதிப்பொருட்கள்
அல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், கிளைகோஸைடுகள், டானின்கள், ஆந்த்ரோகுயினான்கள், புரதங்கள், பீனால்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை உள்ளன.
மருத்துவ பயன்கள்...
ஆவாரம் செடியின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். சித்த மருத்துவத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் ஏராளம்.
சர்க்கரை நோய்க்கு
ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.
குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு
ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும். மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டுக் கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில் கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரைச் சூடான பாலில் கலந்து 48 நாள்கள் குடித்து வந்தால் நோய் அனைத்தும் நீங்கிப் புதுத்தெம்பு கிடைக்கும்.
எலும்புகள் பலமடைய
ஆவாரையின் இலைகள் தரும் பலன்களும் அதிகம். பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்துத் தயிர் அல்லது நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கரு அல்லது பொடியாக்கிய கறுப்பு உளுந்து சேர்த்துத் தசை பிசகுதல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
முகம் அழகுபெற
ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும். ஆவாரம் பூவுடன், பனங்கற்கண்டு, விலாமிச்சை வேர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெறும். ஆவாரம் பூவுடன் சின்னவெங்காயம், பாசிப் பருப்பு சேர்த்து வாரம் இருமுறை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், உடல் அழகு பெறும். புத்துணர்வுடன் இருக்கலாம்.
முடி உதிர்வதை தடுக்க
ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளரும்.
மாதவிடாய் கோளாறுகளுக்கு
பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும்.
கண் நோய்களுக்கு
மெட்ராஸ் 'ஐ' மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி ஆவாரம் பூ பயன்படுத்தலாம்.
காயங்கள் குணமாக
ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.
#ஆவாரம்பூ
No comments:
Post a Comment