Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 12, 2025

வன்கொடுமை குற்றத்துக்கு மரண தண்டனை விதிப்பது உட்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 6 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ல் கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்வது, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது ஆகிய குற்றங்களுக்கு கடுங்காவல் அல்லது மரண தண்டனை விதிக்க மேற்கண்ட மசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மீது ஆசிட் வீசினால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை, பெண்களை பின்தொடர்ந்து கேலி செய்தால் அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இந்த 2 மசோதாக்களை வரவேற்று செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் நேற்று பேசினர்.

“இந்த சட்டங்களை யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருக்க வகைசெய்ய வேண்டும். இச்சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

3 மசோதாக்கள்: சென்னை குடிநீர் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக, நிதித் துறை துணை செயலர் அந்தஸ்தில் உள்ள ஒரு அலுவலரை நியமிப்பதற்கான சட்ட மசோதாவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். எந்த ஒரு நிலத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க, மாவட்ட ஆட்சியரின் அந்தஸ்துக்கு குறையாத வருவாய்த் துறை அலுவலருக்கு அரசின் அதிகாரங்களை ஒப்படைக்க வழிவகை செய்யும் மசோதாவை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்த பள்ளி திருத்த சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

தனி அலுவலர் நியமனம் ஏன்? - தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்க ஒப்புதல் அளிக்கும் மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், நேற்று அதற்கு பதில் அளித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, ‘‘உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தயாராகவே உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும். இந்த பணிகள் நடப்பதாலேயே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் தனி அலுவலர்களின் பணிக்காலம் 11 முறை நீட்டிக்கப்பட்டது’’ என்றார்.

விவாதத்துக்கு பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மேற்கண்ட 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இவை விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News