Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 9, 2025

பராமரிப்பு பணிகள் அரைகுறை; சான்று தர தயங்கும் தலைமையாசிரியர்கள்


தமிழகத்தில் ஊரக பதவிக்காலம் முடிவால், பள்ளி கட்டுமான பராமரிப்பு பணிகள் அவசர கதியில் முடிந்துள்ளதால், நிறைவு சான்று தர தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் ஜன., 5ல் ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தது. 38 மாவட்டங்களிலும், 10,000த்திற்கும் மேற்பட்ட ஊராட்சி துவக்கப்பள்ளிகள் உள்ளன.

புதிய வகுப்பறை

இவற்றில் பழுது, பராமரிப்பு தேவைப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், புதிய வகுப்பறை தேவைப்படும் பள்ளிக்கும், தலா 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டது.

இதை ஒன்றிய நிதி, ஊராட்சிகள், கலெக்டர்களின் விருப்புரிமை நிதிகளில் இருந்து ஒதுக்கினர். இப்பணிகளை ஊரக வளர்ச்சி முகமை துறை செய்கிறது.

இதில், வகுப்பறை, ஆசிரியர்கள் ஓய்வறை ஆகியவற்றில் சேதம் இருந்தால், சரி செய்து கொள்ளலாம்.

அதீத சேதம் இருந்தால் கட்டடத்தை இடித்து விட்டு கட்டலாம். பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில் கூரை ஒழுகுவது போன்ற நிலை தான் உள்ளன.

இவ்வாறு நடக்கும் பணிக்கான ஆணையை தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். ஆனால், ஊரக வளர்ச்சித் துறையினர் வழங்காமலேயே பணிகளை செய்கின்றனர்.

கூரைகளை சரிபார்க்காமல், கூலிங் ஷீட்டு களை அமைத்துள்ளனர். மின்விசிறியை மாட்டக்கூட இடம் விடவில்லை என்றும், ஜன., 5க்குள் நிதியை பயன்படுத்த வேண்டும் என அரையாண்டு விடுமுறையில் பெயருக்கு பணிகளை முடித்து விட்டு சென்றுள்ளதாகவும் தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

நிறைவு சான்று

தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

நாங்கள் தான் நிறைவு சான்று தர வேண்டும். ஆனால், அரைகுறையாக அவசரகதியில் பணிகள் நடக்கின்றன. பள்ளிகளில் நடக்கும் எந்த பணிக்குமே, பணி ஆணை தகவல் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

என்னென்ன பணிகள் நடக்கின்றன என்ற விபரம் இல்லை. இதற்கு நிறைவு சான்று அளிக்கும் பட்சத்தில் எங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment