Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 14, 2025

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 25.57 லட்சம் மாணவர்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் நடப்பாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 25.57 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வை 3 லட்சத்து 89,423 மாணவர்கள், 4 லட்சத்து 28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23,261 பேரும் எழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 46,411 மாணவர்கள், 4 லட்சத்து 40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9 லட்சத்து 13,036 பேர் எழுத இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 25 லட்சத்து 57,354 பேர் எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வுக்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொதுத் தேர்வு என்பது தேர்தலுக்கு சமமானதாகும். இது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. தேர்வெழுத வரும் மாணவர்கள் பதற்றத்தை தவிர்த்து, மகிழ்ச்சியான மனநிலையில் வர வேண்டும்.

நமது மாணவர்களின் கல்வி நிலை குறித்து தவறான தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வாக 10 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்து தரவுகளை வெளியிட திட்டமிட்டு இருக்கி ம். மாநில திட்டக்குழு இந்த அறிக்கையை வெளியிடும். அப்போது நமது தமிழக மாணவர்களின் நிலை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

தனி தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்: இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்.14) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியில் தேர்வெழுதும் மாணவர்: பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஆனந்த், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கணினிவழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுத தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக இவர் விளங்குவார். வரும் காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வெழுத இந்த நிகழ்வு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News