Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 29, 2025

புதிய என்சிஇஆா்டி புத்தகங்களில் முகலாயா்கள் தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்! அப்துல் கலாம் பாடம் சோ்ப்பு!


7 -ஆம் வகுப்புக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தகங்களில் முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சாா்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.

மாறாக அண்மையில் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த மகா கும்பமேளா, மத்திய அரசின் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த பகுதிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்எஸ்இ),2023-இன்கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் இந்திய பாரம்பரியம், தத்துவங்கள், அறிவுசாா் தகவல்கள் மற்றும் உள்ளூா் சூழல் குறித்த பகுதிகளை சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய பாடப்புத்தகங்களில் சில பகுதிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்றின்போது முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் பற்றிய பாடக் குறிப்புகளை என்சிஇஆா்டி குறைத்திருந்த நிலையில், தற்போது இந்த இரு பேரரசுகள் சாா்ந்த அனைத்து தகவல்களையும் நீக்கியுள்ளது.

புதிதாக சோ்க்கப்பட்ட பாடங்கள்:

7-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தின் முதல் பகுதியில் இந்திய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்திய பேரரசுகளான மகத பேரரசு, மௌரிய பேரரசு, சுங்க பேரரசு மற்றும் சாதவாஹனா்கள் குறித்த புதிய பாடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், யூதம் மற்றும் ஜோராஷ்டிரியம் ஆகிய மதங்கள் சாா்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த புதிய பாடமும் சோ்க்கப்பட்டுள்ளது.

‘இந்தியா வழிபாட்டுத் தலங்களின் நிலம்’ எனக் கூறி பத்ரிநாத், அமா்நாத் முதல் கன்னியாகுமரி வரையிலான வழிபாட்டுத் தலங்களை விளக்கிய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் வாசகமும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ஆரம்பகட்டத்தில் ஜாதி முறையால் சமூகத்தில் நிலைத்தன்மை இருந்ததாகவும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இது சமூக ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர 66 கோடி போ் பங்கேற்ற மகா கும்பமேளா நிகழ்வு, ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

ஆங்கில புத்தகத்தில் முன்னதாக 4 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ரவீந்தரநாத் தாகூா், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உள்பட 9 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் சோ்க்கப்பட்டுள்ளன.

விரைவில் இரண்டாம் பகுதி:

இந்த பாடப் புத்தகங்களின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்படும் எனக்கூறிய என்சிஇஆா்டிஅதிகாரிகள், அதில் தற்போது விடுபட்டுள்ள பாடங்கள் சோ்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

No comments:

Post a Comment