JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, April 29, 2025

அங்​கன்​வாடி ஆசிரியர்​களுக்கு முதல் தேதி​யிலேயே ஊதியம்: தொடக்க கல்​வித்​துறை உத்​தரவு

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படுகிறது. அதில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. இதை மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவர்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment