Join THAMIZHKADAL WhatsApp Groups
அறிவியல் வளர்ச்சியின் முக்கிய மூல காரணியான மூலப் பொருட்களின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்படும் அத்தனை பொருட்களும் ரசாயனம் சார்ந்ததாகவே இருக்கிறது.
20ம் நூற்றாண்டின் பெரும் மாற்றங்களிலும், மாற்றங்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையாக இரசாயனத்தினால் விளைந்த வினை பொருட்கள் உள்ளடக்கமாக இருந்தது.
தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கெமிக்கல்கள் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை கெடாமல் வைப்பதற்கும், உணவுப் பொருட்களின் சுவை கூட்டுவதற்கும், உணவுப் பொருட்களை பாதுகாக்கும் பொருள் என எங்கும் நீக்கம் மற அனைத்துவித உபயோகங்களிலும் கெமிக்கலின் பயன்பாடு முக்கிய அம்சமாக விளங்குகிறது.
மனிதன் வாழ்க்கையோடு கலந்த கெமிக்கல்கள், ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கெமிக்கலின் பயன்பாட்டை மனித குலத்திற்கு பயன் தரும் பொருட்களை உருவாக்கும் பெரிய பொறுப்பில் உங்களை செலுத்த விரும்புகிறீர்களா? அப்படியெனில் தயங்காமல் தேர்ந்தெடுங்கள் கெமிக்கல் இன்ஞ்ஜினியரிங் படிப்பை.
பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் படிப்பவர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம். இதிலும் மேற்படிப்பு கூடுதல் பலன் தரும். உரம், பெட்ரோலிய நிறுவனங்கள், மருந்து உற்பத்தி, கெமிக்கல் தொழில் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.
கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத் திட்டம் கடினமானது என்ற தவறான கருத்து மாணவர்கள் மத்தியில் உள்ளது.
பிளஸ் 2-வில் வேதியியல் பாடத்தில் நன்றாகத் தேறியவர்களுக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் எளிமையானதே.
அதேபோல, ரசாயன ஆலைகளில் வேலை பார்த்தால் உடல்நலம் பாதிக்கும் என்றும் நினைக்கிறார்கள். உடல்நலம் பாதிக்காதபடி பணியாற்றுவதற்கு இன்றைக்கு நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
முன்பு தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்டிருந்த தனியார் கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை இருக்கவில்லை. இன்றைய நிலையோ வேறு. பல தனியார் பொறியியற் கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங்கும் அதனைச் சார்ந்திருக்கும் துறைகளும் அமைந்திருக்கின்றன.
பிற பொறியியற் பிரிவுகளைப் போன்றே கெமிக்கல் இன்ஜினியரிங் துறையும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளின் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இத்துறைக்குக் குறிப்பாக கெமிக்கலின் பங்களிப்புச் சற்று அதிகமானது.
இத்துறையில் படித்து முடித்தவர்கள் மூலக்கூறுகளையும் (molecules) அவற்றின் வேதிவினைகளையும் (reactions) ஆராய்ந்து பயனுள்ள புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், பொருட்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து எடுத்துப் பெருமளவில் நுகரக்கூடிய அளவில் பன்மடங்கு உற்பத்தி செய்ய உதவுவது வேதிப்பொறியியலும், கெமிக்கல் இன்ஜினியர்களும் தான்.
கெமிக்கல் இன்ஜினியரிங் இன்று பல திசைகளிலும் கிளை பரப்பியிருக்கும் ஒரு அகன்ற துறை.
அது என்ன அகன்ற துறை?. சரி பார்போம்.
நமது நாளொன்றைக் கருத்தில் கொள்வோம். காலை எழுந்து சற்றே சோம்பல் முறித்துவிட்டுக் குளியலறைக்குள் செல்வோம். அங்கே பல் துலக்கப் பயன்படுகிற பசையில்(பேஸ்ட்டு) இருந்து குளிக்கும் போது பயன்படும், சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், லோஷன் போன்ற சகல தைலங்களும் களிம்புகளும் வேதிப் பொருட்களே. நல்ல மென்மையான துண்டில் ஈரத்தைத் துவட்டிக் கொள்கிறீர்களா? அதிலே அழகான படமோ, வடிவோ, வண்ணமோ இருக்கிறதா? அவற்றை உருவாக்கப் பயன்பட்ட சாயங்களும் வேதிப்பொருட்களே.
தலைவாரப் பயன்படும் சீப்புக் கூட ஒரு (பிளாஸ்டிக்) பொருளினால் செய்யப்பட்டிருக்கும்.
காலையில் உட்கொள்ளும் உணவு முதல், நாள் முழுதும் உட்செலுத்தும் உணவு, தீனி, வெவ்வேறு வித பானங்கள் என்று எல்லாவற்றிலும் கெமிக்கல் பொருளின் நுட்பங்களும் நிறைந்திருக்கும். உணவுச்செலுத்தத் தொழில்முறை (food processing industry) கூட கெமிக்கல் துறையின் ஒரு உட்பிரிவு தான்.
ஆற்று நீரைச் சுத்தப்படுத்தி மாசகற்றிக் குடிநீராகப் பதப்படுத்தித் தருவதாக இருந்தாலும், கடல்நீரைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி அங்கு செலுத்தங்கள் அனைத்தும் கெமிக்கல் இன்ஜினியரிங் அடியே.
உடல் நோயகற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் வேதியல், உயிர்வேதியல், உயிரியல் போன்ற துறைகளுக்குப் பங்கிருந்தாலும், அவற்றைப் பெரிய அளவில் தயாரிப்பதை கெமிக்கல் இன்ஜினியரிங் பார்த்துக் கொள்கிறது. நொதித்தல் (fermentation) நுட்பங்கள் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படும்.
வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வாகனங்கள் மூலம் செல்கிறோம். அந்த வாகனத்தை இயக்குவதற்கு ஆதாரமாக இருக்கும் எரிபொருட்கள் தயாரிக்கப்படுவதும் கெமிக்கல் இன்ஜினியரின் விள்ளெடுப்பு (refining) மற்றும் துளித்தெடுப்பு (distillation) நுட்பங்கள் மூலம் பெட்ரொல், மண்ணெய், டீசல், என்று பிரித்தெடுத்தத் தருவதும் கெமிக்கல் இன்ஜினியரிங் தான். ஒரு மாட்டுவண்டியில் சென்றால் கூட அதன் சக்கரங்கள் எளிதாய் எதிர்ப்பின்றிச் சுழல க்ரீஸ் பயன்படுத்துவோமே. இப்படி மாட்டு வண்டிகள் முதல் எறிபறனைகள் (jet planes) வரை இயங்குவதற்கான ஆதாரமாகவோ ஒத்தாசை புரிவதாகவோ இருப்பதும் கெமிக்கல் இன்ஜினியரிங் தான்.
இன்று, சதா செல்லமாய்ச் சிணுங்குகின்ற செல்பேசிகள் கூட எடை குறைவாய் ஆகிக் கொண்டிருப்பதற்கு அவற்றைத் தயாரிக்க உதவும் ப்ளாஸ்டிக் பொருட்களும் வேதிப்பொறியியலைச் சார்ந்தது.
தற்போது கெமிக்கல் இன்ஜினியர்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுப்பதற்க்காக கடும் முயற்சி செய்துவருகின்றார்கள்.
கெமிக்கல் துறையில் எப்படி சேருவது?
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் விண்ணப்பித்து அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் சேரலாம், அல்லது நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் விண்ணப்பிக்கலாம். பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு டிப்ளமோவில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் கெமிக்கல் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் கெமிக்கல் இன்ஜினியரிங் தேர்தெடுத்துப் படிக்கலாம். பிறகு டிப்ளமோ முடித்துவிட்டு இன்ஜினியரிங் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சிலிங் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் (ACGCET) நடக்கும்.
தமிழ்நாட்டில் முதுகலை பொறியியல் பட்டம் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET/CEETA தேர்வு எழுத வேண்டும்.வேறு மாநிலங்களில் அல்லது ஐஐடியில் அல்லது மத்திய உயரகல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு GATE தேர்வு எழுத வேண்டும். வெளிநாட்டில் MS படிக்க GRE தேர்வு எழுத வேண்டும்.
வேலை வாய்புகள் எப்படி?
பொருட்களை உருவாக்குவதற்கும், வடிவமைப்பதற்கும், உபகாரணங்களை கட்டுவதற்கும், அதில் பணியாற்றுவதற்கும், கெமிக்கல் இன்ஜினியரிங் சம்பந்தமான தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் ஏராளம்.
அதிகமாக கெமிக்கல் இன்ஜினியர் சோப்பு, பெயிண்ட், ப்ளாஸ்டிக், சிமெண்ட், எண்ணை சுத்திகரிப்பு, மருந்துப் பொருட்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
தயாரிப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும் திறமை உள்ளவர்கள் நிர்வாகியாகவும், ப்ராஜெக்ட் தலைவராகவும், தொழில் சார்ந்த யோசனையாளராகவும் பணிபுரிய வாய்புகள் உள்ளது.
தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருவதனால் படித்து முடிப்பவற்களுக்கு பிரகாசமான வாய்புகள் காத்திருக்கின்றது.
கெமிக்கல் இன்ஜினியர்கள் முன்னனி நிறுவனத்தில் அதிக வருமானம் பெற்று வருகிறார்கள்.
தற்போது CEO பதவியில் இருந்து அதிக வருமானம் பெற்றுவரும் கெமிக்கல் இன்ஜினியர்களின் நிறுவனம் உங்களுக்காக DU PONT, GENERAL ELECTRIC,DOW CHEMICAL, EXXON, BASF, GULF OIL, TEXACO, B.F GOOD RICH, மற்றும் RELIANCE.
எல்லோரும் அம்பானியைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.ஆனால் அம்பானியை நல்ல கொண்டுவந்ததும் கெமிக்கல் துறை தான். அது மட்டும் இல்லாமல் உலக கோடிஸ்வரரில் ஒருவரான முகேஷ் அம்பானியும் கெமிக்கல் இன்ஜினியர் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.
ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் மெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளில் அதிகமான தேவைப்பாடு உள்ளது. காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள், துணி தயாரிக்கும் கூடங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் துறை, உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள், வாசனை திரவியங்கள் தயாரிப்பு நிறுவனம் போன்ற இடங்களிலும், பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும், இந்திய வான் வெளி மையங்கள் போன்றவற்றிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
இத்துறையில் தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் வேலைவாய்ப்பு கூடுதலாக உள்ளது. இதனால் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்கள் கூடவே ஹிந்தியும் கற்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு:
குறிப்பாக அரபு நாடுகள், சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் கெமிக்கல் இன்ஞ்ஜினியரிங்கின் தேவை அதிக அளவில் இருக்கிறது.
வளர்த்து கொள்ள வேண்டிய திறமைகள்:
சொந்த ஊரில் வேலை கிடைப்பது அரிது. ஆகையால், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வேலை பார்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். இரசாயனங்களோடு பணிபுரிவதால் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருக்கவேண்டும். தொடர்ந்துக் கற்று கொண்டே இருந்தால் தான் முன்னேற்றம் எளிதாக கிடைக்கும்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சில:
உலகின் டாப் - 800 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடித்த 1 இந்திய பல்கலைகழகங்கள் ஐ.ஐ.டி (மும்பை, டெல்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கேலா, சென்னை, பிட்ஸ்பிலானி) மும்பை யூனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலாஜி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூர். நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்.
கெமிக்கல் இன்ஜினியரிங் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலவகை பகுதிகளாக பிரிந்து சிறப்பு (ஸ்பெசலைஸ்டு) படிப்புகளாக வழங்கப்படுகிறது. அவற்றில் சில:
1. Petrochemical engineering
2. Pharmaceutical engineering
3. Plastics engineering
4. Petroleum engineering
5. Ceramic engineering
6. Plastic technology
7. Oil Technology
8. Biochemical engineering
9. Paint Technology
10. Polymer science and technology
11. Textile technology
12. Rubber Technology
13. Pulp and paper engineering
14. Cryogenic engineering
15. Leather Technology
16. Electro chemical engineering
17. Polimer technology
18. Nano technology
No comments:
Post a Comment