Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 2, 2025

சவால் விட்ட கல்வி அமைச்சர் மகேஷ்; சத்தமில்லாமல் அமைத்தார் சிறப்பு குழு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சவால் விட்ட கல்வி அமைச்சர் மகேஷ்; சத்தமில்லாமல் அமைத்தார் சிறப்பு குழு

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைவு பற்றிய, ஏசர் அறிக்கையை எதிர்த்து, சவால் விட்ட அமைச்சர் மகேஷ், சத்தமில்லாமல் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள, 14 - 18 வயதுடைய மாணவர்களின் கற்றல் திறனை அறியும் வகையில், 'பிரதம்' கல்வி அறக்கட்டளை சார்பில் கணக்கெடுப்பு நடத்தி, 'ஏசர்' எனும் அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

கடந்தாண்டு வெளியான அறிக்கையில், தமிழகத்தில், 8ம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், 5ம் வகுப்பு மாணவர்களில், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்கத் தெரியாதவர்களாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், ஏசர் அறிக்கை திட்டமிட்டு பழி சுமத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கண்டறியும் வகையில், பெரிய அளவிலான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தி, உண்மையை வெளியிடும் என்று சவால் விட்டார். அதன்படி, மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட, 'ஸ்லாஸ்' கணக்கெடுப்பு அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ரூ.19 கோடி

அதன் அடிப்படையில், கற்றல் திறனில் பின்தங்கியுள்ள, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதத்திறன், மொழிப்பாடத் திறன்களை மேம்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 15 பேர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக, ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடுகளுடன், பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்த கணக்கெடுப்பு, மிகவும் மேலோட்டமாகவும், நியாயமற்ற முறையிலும் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், கற்றல் திறன் குறைந்தால் பள்ளியின் பெயர் கெடும் என, தலைமை ஆசிரியர்களும், உண்மையான தரவுகள் வெளியானால், தங்களுக்கு பாதிப்பு வரும் என மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களும் பயப்படுகின்றனர்.

அதேபோல, மத்திய அறிக்கையை விட, மாநில அறிக்கையில் குறைவான கற்றல் திறன் வெளிப்பட்டால், தனக்கு பாதிப்பு ஏற்படும் என, துறை இயக்குநரும் பயப்படுகிறார். அதனால், அமைச்சரின் சவாலை நிறைவேற்ற, மேலோட்டமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முக்கியமாக, 4,000க்கும் அதிகமான துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், கற்றல் அடைவு எப்படி சாத்தியமாகும்?

தமிழகத்தில், 30,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ள நிலையில், 4,000 பள்ளி ஆசிரியர்கள் மட்டும், தங்கள் பள்ளி மாணவர்களிடம் மொழிப்பாடத்தையும், கணக்கு பாடத்தையும் சோதிக்க வரலாம் என, அமைச்சருக்கு அழைப்பு விட்டது ஏன்?
மர்மம்

மேலும், 8ம் வகுப்பில், கற்றல் திறனில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முன்னிலை வகிப்பது எப்படி என்பதற்கான விடையும் மர்மமாகவே உள்ளது. அதாவது, பிரதம் அமைப்பு நடத்திய ஏசர் அறிக்கை உண்மை எனில், இந்த திறன் பயிற்சி தேவை.

தமிழக அரசின் ஸ்லாஸ் அறிக்கை உண்மை எனில், இந்த பயிற்சி தேவை இல்லை. இதில் எது உண்மை என்பதை, அமைச்சர்தான் விளக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News