தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணையவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியல் இடம்பெற்றவர்கள் ஆன்லைன் வாயிலாக தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது பயாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் "வருவாய் துறை ஆணையர் 218 கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தார். பின்னர் இடம் மாறுதல் பெற விரும்புவோர் செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் அனுபவத்தை கருத்தில் கொள்ளாமல் இடம் மாறுதல் நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 218 காலிப்பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்ட விரோதம், இதனால் இடமாறுதலுக்காக காத்திருக்கும் அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களின் அடிப்படையில், இட மாறுதல் வழங்கவும், அதன் பின்னர் நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக வருவாய் துறை செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த உத்தரவால் குரூப் 4 தேர்வு கவுன்சலிங் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நட்ராஜ் அகாடமி நிறுவனர் நட்ராஜ் யூடியூப் வீடியோவில் கூறுகையில், வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைவாக நடத்தி முடித்துவிட்டு, நேரடி நியமனங்களை மேற்கொள்ளலாம். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.
சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் நேரடி நியமனங்கள் நிரப்பப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment