Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 15, 2025

முன்கூட்டியே பி.எட்., செமஸ்டர் தேர்வு; பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்பு


பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே துவக்க ஏதுவாக, கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க பல்கலை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், அரசு கல்லுாரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 700க்கும் அதிகமான கல்வியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, கல்வியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள், குறிப்பிட்ட அவகாசத்துக்குள் துவங்காமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரலிலும், ஏப்ரல் - மே மாதத்தில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் ஆகஸ்டிலும் நடக்கின்றன. இதனால், கல்வியியல் படிப்புக்கான கல்வியாண்டு அட்டவணையில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல், பி.எட்., - எம்.எட்., செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பல்கலை திட்டமிட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி, ஒரு செமஸ்டருக்கு, எம்.எட்., - பி.எட்., படிப்புக்கு, 100 வேலை நாட்கள்; பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., படிப்புகளுக்கு, 125 வேலை நாட்கள்.

அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள், கடந்த செப்டம்பரில் துவங்கின. இந்த செமஸ்டரின் இறுதி வேலை நாளாக அடுத்த ஆண்டு ஜன., 9ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், செமஸ்டர் தேர்வுகளை, ஜனவரி, 20ல் துவங்க, பல்கலை திட்டமிட்டுள்ளது.

பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கடந்த அக்., 12ம் தேதியே நிறைவடைந்தது. இதனால் மாணவர்கள், செமஸ்டர் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என, கல்வியியல் கல்லுாரிகளுக்கு பல்கலை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment