Breaking

Wednesday, January 21, 2026

நீட் 2026: கடைசி 4 மாதங்கள்... வெறும் படிப்பு மட்டும் போதாது; நிபுணர்கள் வழங்கும் 'சக்ஸஸ்' ஃபார்முலா!


நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற படிப்பு மட்டும் போதாது, உடல் மற்றும் மனநிலையைத் தேர்வுக்கு ஏற்றவாறு தயார்படுத்துவதும் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1. பயாலஜிக்கல் கிளாக் (Biological Clock) சீரமைப்பு

நீட் தேர்வு மதியம் 2 முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. எனவே, மாணவர்கள் தங்களின் உடல் கடிகாரத்தை இந்த நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் சில நாட்களுக்கு முன்னரே, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தூங்குவதைத் தவிர்த்து, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது மூளையை உச்சக்கட்டத் திறனுடன் செயல்பட வைக்கும்.

2. சமநிலையான தினசரி அட்டவணை (24 மணி நேரத் திட்டம்)

வெற்றி பெற ஒரு நாளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதற்கான மாதிரி இதோ; படிப்பு (12 மணி நேரம்): 5 மணி நேரம் உயிரியல் (Biology), 7 மணி நேரம் இயற்பியல் மற்றும் வேதியியல் (Physics & Chemistry). இரவு 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். 1 மணி நேரம் உடற்பயிற்சி (30 நிமிடம் பிராணாயாமம் + 30 நிமிடம் நடைப்பயிற்சி). மதிய உணவிற்குப் பிறகு 30 நிமிடம் குட்டித் தூக்கம் (Power nap) மற்றும் படிப்புக்கு இடையே 2.5 மணி நேர இடைவெளிகள்.

3. கடந்த 10 ஆண்டுகால வினாத்தாள் ஆய்வு (2016-2025)

கடந்த கால வினாத்தாள்களை ஆய்வு செய்ததில் சில முக்கிய உண்மைகள் தெரியவந்துள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்றிலும் பெரும்பாலான கேள்விகள் NCERT பாடப்புத்தகங்களிலிருந்தே நேரடியாகக் கேட்கப்படுகின்றன. உயிரியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்பியல் மற்றும் வேதியியலில் கடந்த 10 ஆண்டுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட தலைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

4. தேர்வில் தவிர்க்க வேண்டிய தவறுகள் (Silly Mistakes)

கேள்விகளை சரியாகப் படித்தல் Correct/Incorrect, Not correct போன்ற வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். கடினமான கேள்விகளை முதல் சுற்றில் தவிர்க்கவும். 'ஆப்ஷன் எலிமினேஷன்' (Option Elimination) முறையைப் பயன்படுத்தி நேரத்தைச் சேமிக்கவும். உயிரியலில் வரை படங்கள் (Diagrams) மூலம் கருத்துக்களைப் புரிந்து படிப்பது நினைவாற்றலை அதிகரிக்கும்.

5. பாடவாரியான கவனம் (Subject-wise Focus)

மரபியல் (Genetics), மனித உடலியல் (Human Physiology) மற்றும் சூழலியல் (Ecology) ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும். ஆர்கானிக் வேதியியலில் வினை வழிமுறைகளையும் (Mechanisms), பிசிகல் வேதியியலில் கணக்குகளையும் பயிற்சி செய்யவும். மெக்கானிக்ஸ் (Mechanics) மற்றும் மின்னோட்டவியல் (Current Electricity) போன்ற அடிப்படைத் தலைப்புகளில் வலுவாக இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: கடைசி ஒரு மாதத்தில் புதிய தலைப்புகளைப் படிக்க வேண்டாம். மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எழுதிய பிறகு, செய்த தவறுகளை ஆராயாமல் இருக்க வேண்டாம். ஆரோக்கியமான உடலும் தெளிவான மனமுமே வெற்றிக்கான அடிப்படை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment