22 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய தேதி எப்போது என்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனமான ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்படுகின்றன. ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் இந்த பணியிடங்களை நிரப்பி வருகிறது.
22 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
ரயில்வே வெளியிடும் தேர்வு அறிவிப்புகள் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் தேர்வு அறிவிப்பாக இருப்பது குரூப் டி பணியிடங்கள்தான். பத்தாம் வகுப்பு, ஐடிஐ கல்வித் தரத்திலான இந்த பதவிகளுக்கு காலியிடங்கள் எண்ணிக்கையும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால் தேர்வர்கள் பெரும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
இந்த நிலையில், குரூப் டி பிரிவில் 22 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 21 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான், தற்போது விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதிதான் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 2 ஆகும்.
கல்வித் தகுதி, வயது வரம்பு:
குரூப் டி பிரிவு பணிக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2026 தேதிப்படி 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
இந்த பணிகளுக்கான சம்பளத்தை பொறுத்தவரை ரூ.18 ஆயிரம் முதல் வழங்கப்படும். இதர சலுகைகளும் உண்டு. கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதில் தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.



No comments:
Post a Comment