Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைப்பு





மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடிஇடி) விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

ஒத்திவைப்பு ஏன்?: தமிழ் உள்பட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பணிகளை மேற்கொள்ள வசதியாக விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா, தில்லி மாநிலப் பள்ளிகள், திபெத் பள்ளிகள் ஆகிய தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சிடிஇடி தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.



2018-ஆம் ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்படும். இதற்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு வரை இந்தத் தேர்வை 20 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் உள்பட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்வர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இதுகுறித்து சுட்டுரையில் தனது கருத்தைப் பதிவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளிலும் தேர்வை நடத்த சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை சிபிஎஸ்இ இப்போது மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் தேதியை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.



இது குறித்து சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சிடிஇடி தேர்வுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.