Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 18, 2019

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.



புதுக்கோட்டை,ஜீன்.18: ஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
12 ஆம் வகுப்பு நடத்தும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் பாடவாரியான புத்தாக்க பயிற்சி புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.



பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சார்ந்த நல்ல கருத்துகளை வழங்கும் போது வள்ளல் போல் இருக்க வேண்டும்.தமக்கு தெரிந்தவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் பொழுது எளிமையாக்கி கற்பிக்க வேண்டும்.மாணவர்களிடம் நல்ல அணுகு முறையை வளர்த்து கருத்துகளை முன்மொழிய வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும் பொழுது இன்றைய காலத்திற்கேற்ற தகவல்களை சேகரித்து செல்ல வேண்டும்.மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வந்து உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.பயிற்சி நேரங்களில் அலைபேசியை பயன்படுத்த கூடாது.மாணவர்கள் வகுப்பறையில் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அது போல் நீங்களும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக வகுப்பறையில் நடந்து கொள்ளுங்கள்.மாணவர்களுக்கு சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் ஆசிரியர்களே மற்றவர்களால் பாராட்டப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றார்.



பயிற்சியானது ஜீன் 18 ஆம் தேதி தொடங்கி ஜீலை 5 ஆம் தேதி முடிவடைகிறது.பயிற்சியான ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு நாட்கள் நடைபெறும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் என்.செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பணியிடை பயிற்சி துறைத் தலைவர் பி.நடராஜன்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மாரியப்பன்,புவனேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.பயிற்சியில் சென்னை சென்று பயிற்சி பெற்ற மாநில கருத்தாளர்கள் மற்றும் பாடவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பி.பழனிச்சாமி செய்திருந்தார்.