அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் தங்கம் வழங்கப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்வியில் நாம் மிகச் சிறந்த இடத்திலேயே இருக்கிறோம்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் கூட இந்தியச் சராசரியுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
தமிழ்நாடு: அதேபோல மருத்துவ கல்வியிலும் கூட நாம் தான் மிகச் சிறந்து விளங்குகிறோம்.. வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அந்தளவுக்கு நாம் விரிவான ஒரு கல்வி முறையைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. கல்வி முறையை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகிறது.
அதேநேரம் இங்கே கல்வி என்பது வணிகமயமானதாக என்ற புகாரும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார்ப் பள்ளிகளே அதிகமாக இருக்கிறது. அனைவரும் கல்வி கற்கத் தனியார் பங்களிப்பும் நிச்சயம் தேவை தான் என்ற போதிலும், தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் கல்வியே சிறந்தது. அரசுப் பள்ளிகளின் கல்வி சிறப்பாக இருக்காது என்று சிலர் திட்டமிட்டு தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை: இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகமாகவே இருந்து இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகப் பொருளாதார பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், இதன் காரணமாகவே அரசுப் பள்ளிகளை நோக்கிப் பல பெற்றோர்கள் வந்தனர். வரும் ஆண்டுகளிலும் இந்த மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியரை ஒருவர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்தால் தங்க நாணயத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கே தலைமை ஆசிரியையாக இருப்பவர் இந்திரா. இவர் தான் தனது பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்க இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார்.
தங்கம்: வரும் கல்வியாண்டில் தனது பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று இந்திரா அறிவித்துள்ளார். அதேபோல பள்ளியில் சேரும் மாணவர்களில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மாணவ சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி, அறிமுக விழாக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் இவர் அறிவித்துள்ளார். இதற்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment