Thursday, October 26, 2023

நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

1954ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய தியாகி மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள், போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. திருவிதாங்கூர் பகுதியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1956ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் 'குமரி தந்தை' என அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News