தமிழகத்தில் குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவது பாராட்டை பெற்றுள்ளது. வெளியில் தெரியாமல் ஆசிரியர்கள் செய்து வரும் இந்த உதவி, சமீபத்தில் இந்த பள்ளிக்குச் சென்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. ஆசிரியர்களின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
இதுகுறித்து செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த பள்ளி 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக இருந்தது. செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர், இந்த பள்ளி தமிழக அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் அதிகரித்தபோது மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இருபாலர் பயின்ற இந்த பள்ளி ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
தற்போது 920 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வியை மேம்படுத்த காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்து படிக்க மாணவர்களை அறிவுறுத்தினோம். பல மாணவர்களால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர முடியவில்லை. பள்ளியிலும் பல மாணவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.
ஆசிரியர்கள் ஆர்வம்: இதுகுறித்து மாணவர்களிடம் கேட்ட போது, குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால், காலையில் சாப்பிடா மல் பள்ளிக்கு வருவதாக கூறினர். வீட்டில் காலை உணவு தாமதமாவதால் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் சிலர் கூறினர்.
இதனால் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினோம். அப்போது, அரசுதொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டிதிட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதால் மாணவர்கள் வருகை அதிகரித்திருக்கிறது.
எனவே, நமது பள்ளியிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கலாம் எனவும், அதற்கான செலவை தாங்களே ஏற்பதாகவும் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கூறினர். மாணவர்களுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் இட்லி வழங்கலாம் என்றும், அதை நல்ல தரத்துடன் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.
இதையடுத்து, சாப்பிடாமல் வரும் மாணவர்களுக்காக கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு காலை சிற்றுண்டி வழங்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் 30 பேர் பயனடைந்து வந்தனர்.
படிப்படியாக இந்தஎண்ணிக்கை அதிகரித்து தற்போது தினமும்சராசரியாக 120 பேர் வரை சாப்பிடுகின்றனர். மாணவர்கள் தற்போது சோர்வின்றி படிப்பதால், கல்வித் திறன் அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.
பாராட்டுக்குரியது: இதுகுறித்து இப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழ்மையான மாணவர்களே பயின்று வருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதுபோல், மேல்நிலைப் பள்ளி வரையிலும் காலையில் சிற்றுண்டி வழங்கினால் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு தங்கள் சொந்த செலவில் சிற்றுண்டி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது” என்றனர்.
No comments:
Post a Comment