Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - மகரம்

போராட்ட குணமும் தளராத மனமும் கொண்டு உழைத்து வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து சாதிக்கும் மகர ராசிக்காரர்களே...

உங்களுக்கு இந்தக் குரோதி வருடம் எப்படி அமையும் என்று பார்ப்போம்.

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் சஞ்சரிக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேறுவீர்கள். உற்சாகமான மனநிலை வாய்க்கும். வீட்டின் சமையலறையைப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ராசிக்கு 6 - வது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் அவ்வப்போது சின்னச் சின்ன சவால்களை சந்தித்து முன்னேற வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

30.4.24 வரை குருபகவான் 4 -ல் அமர்வதால் எதிரிலும் நிதானம் தேவை. பணிச்சுமை அதிகரித்தே காணப்படும். ஓய்வெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்றுத் தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும்.

1.5.24 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் ஒரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாகச் சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் சந்தோஷம் பெருகும். கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும்.

திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் மேன்மையடையும். நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசுவார்கள்.

சனிபகவான் 2-ம் வீட்டில் பாதச்சனியாகத் தொடர்வதால் யாரையும் நம்பிப் புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். மற்றவர்களின் சீண்டல்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளிலும் நிதானம் தேவை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்து போகும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டுப் பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருள்களை இழக்க நேரிடும். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்துசெல்லும்.

ராகு 3-ம் வீட்டிலேயே வருடம் முழுக்க சஞ்சாரம் செய்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பிரச்னைகளைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும்.

இளைய சகோதர வகையில் ஆதரவு உண்டு. நவீன எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்குவீர்கள். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ஆனால் கேது 9-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.

13.6.24 முதல் 7.7.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பயணங்களின் போது பாதுகாப்பு அவசியம். எலக்ட்கரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரம்: தொழில் ரகசியங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். வேலையாட்களை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. அவர்களின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். விளம்பரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிலர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். மூலிகை, கட்டட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள். ஐப்பசி, தை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: சமயோஜிதமாகப் பேசி அலுவலகத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும்.

No comments:

Post a Comment