Join THAMIZHKADAL WhatsApp Groups

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, அரசு அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலான ஆலோசனை நடத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினோம்.

அப்போது, மாணவர்கள் இடைநிற்றலைக் கண்காணித்து, இடைநிற்றல் இருப்பின் அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய கல்வியாண்டை விட, இக்கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும். உடனடித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்திட வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.
மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்போம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment