Join THAMIZHKADAL WhatsApp Groups
விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுாரை உள்ளடக்கி தொகுதி முழுதும் விழுப்புரம் மாவட்டத்தில் இடம் பெறும் வகையில் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் அப்போதைய அ.தி.மு.க., அரசு குறிப்பாக அரசியல்வாதிகள் தங்கள் அதிகார பலத்திற்காக திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்தனர். இதற்கு வியாபாரிகள் மற்றும் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்.எல்.ஏ., பொன்முடி தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருக்கோவிலுார், விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.
அதற்கு ஏற்ப திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்முடி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அரகண்டநல்லுாரில் இருந்து திருக்கோவிலுார் நீதிமன்றம் மற்றும் கிளை சிறைச்சாலை 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் நிலையில், மாவட்ட பிரிப்பு காரணமாக 20 கி.மீ., துாரத்தில் இருக்கும் திருவெண்ணைநல்லுார் நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. நீதிமன்ற காவல் பெற்றால் அங்கிருந்து விழுப்புரம் வழியாக வேடம்பட்டு சிறைக்கு கைதிகளை அழைத்துக் கொண்டு அலையும் அவலத்திற்கு போலீசார் ஆளாகியுள்ளனர்.
இது வழக்குகளை எதிர்கொள்ளும் பொது மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கும் கண்டாச்சிபுரம் காவல் நிலைய வழக்குகள் விழுப்புரத்திற்கு செல்கிறது. இது குற்ற வழக்கு விசாரணையின் நிலை. சிவில் வழக்கு என்றால் கண்டாச்சிபுரம் தாலுகா முழுதும் விக்கிரவாண்டி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல வழக்காடிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்குகள் எல்லாம் திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட பிரிப்பின் காரணமாக மாற்றப்பட்டு விட்டது.
திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நிலையில் வழக்குகள் அதிகம் இன்றி வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் என்றால், சார்பு நீதிமன்றமும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்படி அனைத்து துறைகளிலும் சிக்கலை சந்தித்து வரும் திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிரமத்தை விளக்கி, சமீபத்தில் விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் திருக்கோவிலுார் தொகுதி முழுதையும் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க மனு அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாக பதில் அளித்திருந்தார்.
இதனால் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மட்டுமல்லாது போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் காத்திருந்தனர்.
ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் பலமாக எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
No comments:
Post a Comment