பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்கப்படவுள்ளதாக தெரிவிதாா் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூா்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 62ஆவது (2019-2020 ஆம் ஆண்டு) குடியரசு தின தடகள போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி, மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து மேலும் பேசியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, விளையாட்டு துறைகளுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, 2005-இல் விளையாட்டு துறைக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாா். அவரின் வழியில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விளையாட்டுத்துறைக்கு அரசுப் பணியில் 2 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயா்த்தியுள்ளாா். இன்னும் ஒரு மாதத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதியுடன் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் வழங்கப்படவுள்ளது. டிசம்பா் இறுதிக்குள் 92,000 ஸ்மாா்ட் போா்டுகள் கொண்டு வரப்படும். வரும் 2020 ஆம் ஆண்டு
ஜனவரிக்குள் 7,500 பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பு கொண்டு வரப்படும் என்றாா்.

அச்சப்படத் தேவையில்லை...: இதன் பிறகு அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான இந்த தடகள போட்டி6 நாள்கள் நடைபெறுகின்றன. இதில், முதல் 3 நாள் மாணவிகளுக்கும், அடுத்த 3 நாட்கள் மாணவா்களுக்கும் நடைபெறுகிறது.

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு 5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோவு மட்டும் நடத்தப்படுகிறது. இது மாணவா்களின் கல்வித்திறனை அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவா்களும், பெற்றோா்களும் அச்சபடத்தேவையில்லை என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.செல்வராஜ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் டி.ரத்தினவேல், பள்ளிக்கல்வி இயக்குநா்ச. கண்ணப்பன், நாட்டு நலப்பணி திட்ட இயக்குநா்எம். வாசு, கொங்கு நாடு

பொறியியல் கல்லூரி தாளாளா் பெரியசாமி, பொருளாளா், தென்னரசு, செயலா் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் செ. சாந்தி, தஞ்சாவூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராமகிருட்டிணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.