Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 17, 2019

2,500 ஆண்டு பழங்கால 200 கல் படுக்கைகள் கண்டுபிடிப்பு!- தொல்லியல் துறை ஆய்வு செய்யக் கோரிக்கை


சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்த வரலாற்று ஆர்வலர்கள்.

இந்தக் கல்படுக்கையைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த தாரமங்கலம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் செயலாளர் வைரம், கூறுகையில்:

``பழங்கால வரலாற்றுச் சின்னங்களைக் கண்டுபிடிப்பதிலும், அதைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் உடைய 20 பேர் சேர்ந்த ஒரு குழுவாக நாங்கள் இயங்கி வருகிறோம். சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நிறைய பழங்கால நடுகற்களையும், கல்வெட்டுகளையும் கண்டறிந்திருக்கிறோம். இந்த குத்தேரிக்கல்காடு கல்படுக்கையை ஒரு வாரத்துக்கு முன்பு வரலாற்று ஆர்வலர் சேலம் அம்மாப்பேட்டை மோகன் எங்களுக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து, எங்கள் குழுவின் மூலம் அவரை அழைத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றோம்.


அங்கு சென்று ஆய்வு செய்ததில் குத்தேரிக்கல்காடு என்ற ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட கல் படுக்கைகள் இருந்தன. இந்தக் கல் படுக்கைகள் கீழே மூன்று புறம் கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மேலே பெரிய வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தின் வழியாகக் கல் படுக்கைக்குள்ளே செல்ல முடியும். சில கல்படுக்கைகள் நான்கு புறத்திலும் கற்கள் நிறுத்தப்பட்டு மேலே வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது.


கல்படுக்கை அருகே பழங்கால மண் குடங்கள் உடைந்த நிலையில் இருந்தது. பல கல்படுக்கைகள் சிதிலமடைந்து அழிந்து போகும் தறுவாயில் இருக்கிறது. இந்தக் கல்படுக்கைகளைப் பற்றி அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் இக்கல்படுக்கைகளை பாண்டியர் திட்டு என்று அழைப்பதாகவும், பாண்டியர் காலத்தில் நெருப்பு மழை பொழிந்ததாகவும், மக்கள் நெருப்பு மழைக்குப் பயந்து இந்த கல்படுக்கைகளை உருவாக்கியதாகவும் சொன்னார்கள்.


இந்தக் கல் படுக்கைகளைத் தமிழக அரசு தொல்லியல் துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்'' என்றார். இதுபற்றி சேலம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை அரசிடம் கேட்டதற்கு, ``புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வாழ்ந்த மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும்போது பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள்.


இவ்வாறு பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்கள் உருவாக்கியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. கி.மு.800 முதல் கி.பி.300 ஆண்டு வரை பெருங்கற்காலமாக கருதப்படுகிறது. குத்தேரிக்கல்காடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை உயிர் நீர்த்தாரின் ஈமச் சின்னம். இது தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இருக்கிறது. அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.