Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 17, 2019

`வகுப்புகளே இல்லாதபோது தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்?!' - அதிர்ச்சி அளிக்கும் பொறியியல் தேர்வு முடிவுகள்


பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்புகள் மீதான மோகம் குறைந்துகொண்டேவருகிறது. தற்போதைய மாணவர்களின் சேர்க்கையை கடந்தகாலங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தாலே உண்மையை விளங்கிக்கொள்ளலாம்.


இப்படியிருக்க பொறியியல் கல்லூரி வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 481 இணைப்பு அங்கீகாரக் கல்லூரிகள் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரி வாரியாக அறிந்துகொள்ளலாம். 481 கல்லூரிகளிலும், மொத்தம் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் எத்தனை பேர் தேர்ச்சி ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

அதன்படி நேற்று வெளியான 481 கல்லூரிகளில் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வை எழுதிய மொத்த மாணவர்ளும் தோல்வியடைந்துள்ளனர். அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள்தான் இவை.
ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதுதொடர்பாக பேசிய கல்வியாளர் ரத்தினசபாபதியிடம் பேசினோம்.


``இது ஒரு மோசமான நிலை. தனியார் கல்லூரிகளின் அவலத்தைத்தான் இந்தத் தேர்வு முடிவுகள் பறைசாற்றுகின்றன. கல்லூரிகளில் சரியான நிர்வாகம் இல்லை. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை. வகுப்புகளே முறையாக நடக்காமல் இருக்கும்போது, தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான பணத்தை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், மாணவர்களுக்கு முறையாக கல்வியை போதிக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போல், மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களால் இதை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

அவர்கள் படித்து அரியர் எழுதி வெளியே வந்தாலும், கேம்பஸில் தேர்வாகாமல் வேலையின்றி தவிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த நிலை மாறவேண்டும்" என்றார். இந்தத் தேர்வு முடிவுகள், இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்பவர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.