Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 9, 2019

அனைத்து பள்ளிகளிலும் இடஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 சேர்க்கையில் இடஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்தவாரம் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ்1 வகுப்பில் சேர்க்கை பெற்று வருகின்றனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், 11ம்வகுப்பில் சேர்க்கை அளிக்கப்பட வேண்டும்.


சேர்க்கையின்போது, தற்போது நடைமுறையில் உள்ள இனவாரியான ஒதுக்கீட்டின்படி, பாடவாரியாக சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் சேர்க்கையின்போது, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி, கண்டிப்பாக சேர்க்கை அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் சேர்க்கை சம்பந்தமாக, பள்ளிகள் மீது புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது மாவட்ட கலெக்டர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 10ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் தற்போது பெரும்பாலும் பிளஸ் 1 வகுப்பு சேருவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.


விருப்பப்பட்ட பாடப்பிரிவு கேட்டு தனியார் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் பெற்றோர்களுடன் படையெடுத்து வருகின்றனர். அப்போது குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்பின் சேர்க்கையின் போது கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ் வாறு அவர்கள் கூறினர்.