Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 14, 2019

சாதிக் கயிறு, கைப்பட்டை அணியும் மாணவர்கள்: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிக் குறியீடு கொண்ட கைப்பட்டைகளை அணிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி வண்ணக் கைப்பட்டைகளை சாதிகளுக்குத் தகுந்தபடி மாணவர்கள் அணிவதுடன், சாதியை வெளிப்படுத்தும் வகையில் வளையங்கள் மற்றும், நெற்றியில் திலகமிடுவதும் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அடையாளங்கள் எதற்காக?: இந்த அடையாளங்கள், விளையாட்டு வீரர் தேர்வு, உணவு இடைவேளை மற்றும், பள்ளி ஓய்வு நேரங்களில் ஒன்றுகூடவும் பயன்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மாணவர்களால் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கு, சில சாதியத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, இளம் இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அதிகாரிகள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.


இதன் அடிப்படையில், இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியப் பாகுபாடுகளைக் காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும், அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை தொடர்பாக என்எஸ்எஸ் இணை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளார்.