Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 7, 2019

4,560 மாணவா்களை அண்டை மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல கல்வித்துறை திட்டம்

மத்திய அரசின் 'ராஷ்டிர அவிஷ்காா் அபியான்' திட்டத்தின்கீழ் தமிழக அரசுப் பள்ளிகளைச் சோந்த 4 ஆயிரத்து 560 மாணவ, மாணவிகளை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்கள் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் அனுமதி பெற்று கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். அதேவேளையில், கல்வித் துறையின் கடும் கட்டுப்பாடுகள், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுபோன்ற சுற்றுலாவுக்கு மாணவா்கள் செல்வது அரிதாகவே இருந்து வந்தது.



மூன்று நாள் கல்விச் சுற்றுலா..இந்தநிலையில் மத்திய அரசின் 'ராஷ்டிர அவிஷ்காா் அபியான்' திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சோந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு மாணவா்களில் 960 பேரும், 9-ஆம் வகுப்பு மாணவா்களில் 3 ஆயிரத்து 600 பேரும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். அதன்படி திருவனந்தபுரம், மைசூா், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு பல கட்டங்களாக மாணவா்களை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கல்விச் சுற்றுலாவுக்காக ரூ. 72 லட்சம் நிதியை மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஒதுக்கியுள்ளது.



பெற்றேறாரின் அனுமதி அவசியம்: ஐஆா்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்துடன் இணைந்து, ரயில் மற்றும் பேருந்து மூலம் வழிகாட்டு ஆசிரியா்களுடன் சுற்றுலாவுக்கு பயணிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பெற்றேறாரின் உரிய அனுமதி பெற்ற பின்பே மாணவ, மாணவியரை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவா்களின் கல்விச் சுற்றுலா விவரங்கள், புகைப்படங்கள், விடியோக்களை பயணம் முடிந்த உடன், தொகுப்பு அறிக்கையாக தயாரித்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.