Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கருத்துரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''சென்னையில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து போலீஸாரால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ் 1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் குறித்து மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசிடம் கேட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment