Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிக்கு சீல்?: பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகளை விரைவில் மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக மேற்கண்ட பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 4382 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம்வகுப்புவரையும், எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையும், எல்கேஜி முதல் 10ம் வகுப்புவரை என பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. அவற்றுக்கான அங்கீகாரத்தை பொருத்தவரையில் தொடர் அங்கீகாரம், ஆண்டுதோரும் புதுப்பிக்கும் அங்கீகாரம், என வழங்கப்பட்டுள்ளன.



அங்கீகாரத்துக்கான கால அவகாசம் முடியும் தேதியில் மீண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.

சில பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் போது, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் போது திருப்தியின்மை காரணமாக அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது அந்த மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்காக அனைத்து வகை பள்ளிகளும் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதி மன்றத்தின் தீர்ப்பு பள்ளிக் கல்வித்துறை வந்துள்ளது.

அதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த பட்டியலையும் கேட்டுள்ளார். அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகங்களில் அங்கீகாரம் குறித்து தகவல்களை எழுதி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தொடர்பான விவரங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன்படி, திருப்பூர் 86, சேலம் 53, திருவள்ளூர் 48, சென்னை 7 என மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள பள்ளிகளை விரைவில் மூட வேண்டும் என்று அரசும் தெரிவித்துள்ளது.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், 23ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட 709 அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த பள்ளிகள் சீல் வைத்து மூடப்பட உள்ளன. மேலும், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது