Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 15, 2019

இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை? ஸ்டாலின் அடிக்கும் எச்சரிக்கை மணி


சென்னை: இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை என்ற தாழ்நிலையை தமிழக அரசின் உத்தரவு உருவாக்கி விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையிவ் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 கல்வியாண்டிலிருந்து பொதுத் தேர்வு நடைபெறும்" என்று அவசர ஆணை பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு, தி.மு.கழகத்தின் சார்பில், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி கற்பதற்கு பள்ளிக்குள் நுழைவதிலிருந்து - தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் இந்த உத்தரவு உருவாக்கும் என்ற அடிப்படை உண்மையை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் திரு. செங்கோட்டையன் உணராதது கவலையளிக்கிறது.


"இப்போது மட்டும் அல்ல. எப்போதுமே 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது" என்று கூறிவந்த அமைச்சர் திரு. செங்கோட்டையன் திடீரென்று, "மத்திய அரசின் முடிவுப்படியே இந்த பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும்" என்றெல்லாம் வக்காலத்து வாங்கி, அர்த்தமற்ற கருத்தை முன்வைப்பது ஏன்? மத்திய பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கி மாநில அரசின் கல்வி உரிமையைத் தாரைவார்ப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, அதற்கு அதிமுக அரசு தமிழகத்தில் இந்த அறிவிப்பின் மூலம் கால்கோள் விழா நடத்தியிருப்பது ஏன்? எதற்காக?
இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தப் பொதுத் தேர்வு 'இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை' என்ற தாழ்நிலையை உருவாக்கி - ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்தைத் தோற்றுவித்து - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியறிவையும் எட்டாக் கனியாக்கி விடும்!


'கல்விச் சீர்திருத்தம்' என்ற பெயரில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை 'பெயில்' ஆக்கி - ஆரம்பக் கல்வி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழ்நிலையையும், அவர்கள் படிப்பதையே வெறுத்து அந்தக் கல்வியை விட்டு விலகி, குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரத்தையும் மத்திய - மாநில அரசுகள் கூட்டாகக் கடைப்பிடிக்கின்றன. இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஆகவே, 'மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு' என்ற 13.9.2019 தேதியிட்ட அரசு ஆணையை அதிமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


'சீர்திருத்தம்' என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவில் சீர்கேடு உண்டாக்கிச் சிதறடிக்கும் எந்த முடிவினையும் பெற்றோர், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்காமல் - அவசரக் கோலத்தில் எடுத்து மாணவர் சமுதாயத்தின் மீது திணித்திட வேண்டாம்; அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிட வேண்டாம் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment