Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 27, 2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு

வெள்ளி விழாவைக் கடந்து பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகத் தமிழர்களிடையே கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 1968-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது அண்ணாவின் பெருவிழைவால் பிரெஞ்சு மொழிக்கென்று உயராய்வு நிறுவனம் செயல்படுவதைப் போன்று தமிழுக்கென்று ஓர் உயராய்வு நிறுவனம் சென்னையில் தொடங்கப் பெறவேண்டும் என்ற விழுமிய எண்ணத்தின் விளைவாக 1970-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததைச் சிறப்பிக்கும் வகையில் 1997-ம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய அவ்வமயம் வெள்ளி விழா நினைவுகளை என்றும் நினைவில் கொள்ளும் வகையில் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய வெள்ளிவிழா மலரை வெளியிட்டுள்ளது. இன்று 50-ம் ஆண்டான பொன்விழா ஆண்டில் (1970-2020) அடியெடுத்து வைத்துள்ளது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகளுள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கென தனிக்கவனம் செலுத்தி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றார். இதன் காரணமாக நிறுவனத்தில் தமிழர்களின் சிறப்பினை அயல்நாட்டினரும், பிற மொழியினரும் அறிந்துகொள்ளும் வகையில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், திருக்குறளின் பெருமையினை எழுத்து வடிவத்தோடு ஓவியத்தின் வாயிலாகவும் எடுத்துக்கூறும் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம், பிற மொழியாளர்கள் தமிழைக் கற்க நவீன உட்கட்டமைப்புகளோடு கூடிய மொழிப்பயிற்சிக் கூடம், தமிழர்களின் அறிவுக் கருவூலங்களைச் சுமந்து நிற்கும் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்கான ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உலகத் தமிழர் பண்பாடு, வரவேற்பு (ம) தகவல் மையம், தொல்காப்பியரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் தொல்காப்பியர் ஆய்விருக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

தொடர்ந்து அவரின் உன்னத நெறியில் தமிழக அரசை வழி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ஆய்வு மாணவ / மாணவியர் விடுதிக் கட்டிடம், புதிய நூலகக் கட்டிடம், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நூலகம், நூலகத்தில் உள்ள நூல்களை மின் எண்மம் செய்ய நிதியுதவி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை, முதுகலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சுவடியியல் பட்டய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

எம்ஜிஆர் பெயரில் 1 கோடி ரூபாய் வைப்புத்தொகையில் சமூகவியல், கலை மேம்பாட்டு ஆய்விருக்கை தொடக்கம், ஆண்டுதோறும் காட்சிக்கூடங்கள் பராமரிப்பிற்கான நிதியுதவி, ஆண்டுதோறும் தேசிய / பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த நிதியுதவி, அண்ணா கருத்தரங்கக் கூடத்திற்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கு நிதியுதவி, ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்குதல், தமிழ்த்தாய் ஊடக அரங்கில் காட்சிப்படுத்த குறும்படம் தயாரிக்க நிதியுதவி, தமிழாய்வு மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்திற்கு நிதியுதவி, தமிழாய்வு வலைதளத்தில் ஆய்வேடுகளைப் பதிவேற்றம் செய்ய நிதியுதவி, ஆண்டுதோறும் சுவடிகள் திரட்ட நிதியுதவி ஆகியவற்றை அளித்து நிறுவனத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். இத்துனை சிறப்புகளுடன் தனது ஆய்வுப் பணிகளை ஆக்கப்பணிகளாக்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தனது வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது.

வெள்ளி விழாவைக் கடந்து இன்று பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கட்டுரைகள் உலகத் தமிழர்களிடையே வரவேற்கப்படுகின்றன.

* மொழி, இனம், மருத்துவம் தொன்மம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழ் வரலாறு என பன்முக ஆய்வுத் தளங்களிலும் இக்கால இலக்கியங்கள் பொருண்மைகளிலும் அமையலாம்.

* கட்டுரை தமிழிலும் அல்லது ஆங்கிலத்திலும் எழுதப்படலாம்.

* தமிழில் அமையும் கட்டுரை ஒருங்குறி (Unicode) எழுத்துருவிலும். ஆங்கிலக் கட்டுரை ஏரியல் (Arial) எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.

* கட்டுரை ஏ-4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

*· கட்டுரை நிறுவனத்திற்கு வந்து சேரவேண்டிய இறுதி நாள் அக்டோபர் 15 - வியாழக்கிழமை மாலை 5.30 மணி வரை

* கட்டுரை iitsgj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

* தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் நிறுவனம் வெளியிடும் "பொன்விழா ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்" என்ற சிறப்பு கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறும்.

* மேலும், விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113, தொலைபேசி - 044-22542992, 22542781 தொடர்பு கொள்ளலாம்.

எனவே, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினை (1970-2020) சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்படவுள்ள சிறப்பு கட்டுரைத் தொகுப்பிற்கு தமிழறிஞர்கள் மற்றும் தமிழாய்வாளர்கள் கட்டுரைகள் அனுப்பலாம்'. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment