Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 14, 2020

நெல்லையில் நீட் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்: தாலி, மெட்டியை கழற்றிய பிறகு தேர்வெழுத அனுமதி

திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் செல்ல புதுமணப்பெண் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.

தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு நீட் தேர்வு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

கணவர் சம்மதம்

தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.

No comments:

Post a Comment