Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 30, 2022

விருச்சிக ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வெற்றிகள் குவியும். கடினமான காரியங்களையும் தங்களின் இங்கிதமானப் பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள்.

இன்பமோ துன்பமோ அதை வெளியில் காட்டி அலட்டிக்கொள்ளாமல் வாழும் விருச்சிகராசி அன்பர்களே... கடந்த சில ஆண்டுகளாக அளவில்லாத துன்பத்தை சந்தித்து வந்திருக்கும் உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே ஆண்டு முழுவதுமே நல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உங்களுக்கு அணிவகுத்து வந்தபடி இருக்கும். நீங்களும் அவற்றை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களை பலப்படுத்தும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். செல்வாக்குக் கூடும். புதிய வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வெற்றிகள் குவியும். கடினமான காரியங்களையும் தங்களின் இங்கிதமானப் பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தமும் உண்டாகும்.

5, 6-ம் வீடுகளில் குருபகவான் சஞ்சார பலன்கள்

ராசிக்கு 5-ம் வீடான மீனத்தில் குருபகவான் அமர்ந்திருக்கும் பலன்தரும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ராசிக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. எனவே நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமணம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குத் திருமணமும் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மதிப்பு மரியாதை கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

23.4.2023 முதல் குருபகவான் 6-ம் வீடான மேஷத்தில் சென்று மறைவதால் தேவையற்ற மனச் சோர்வு வந்த வண்ணம் இருக்கும். வேலைகளில் ஒரு இழுபறி நிலை காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
குருபகவான்

ராகு - கேது உங்களுக்கு சாதகமா?

ராசிக்கு கேது 12-ம் வீட்டிலும் ராகு 6-ம் வீட்டிலும் 8.10.2023 வரை சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால் துக்கம் குறையும். எதிரிகளாலும் ஆதாயம் கிடைக்கும். சொந்த-பந்தங்களின் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். 9.10.2023 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.

சனியின் சஞ்சாரம் எப்படி?

சனிபகவான் ராசிக்கு 3-வது வீடான மகரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் எதையும் மிக எளிதாக வெல்வீர்கள். சில பிரச்னைகளுக்கு யதார்த்தத் தீர்வு காண்பீர்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு சொத்தை விற்பீர்கள். ஆனால் 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 4-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். திடீரென பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

வியாபாரம்: ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். மே மாதம் முதல் குரு சாதகமில்லாமல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. யாரையும் நம்பிப் பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பணியாளர்களிடம் பக்குவமாகப் பேசி வேலைவாங்க வேண்டும்.

உத்தியோகம்: அலுவலகம் ஒருநாள் போல் மறுநாள் இருக்காது. புகழும் சச்சரவும் மாறிமாறி வரும். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வாருங்கள். அதிகாரிகள் சொல்லும் குறைகளை நினைத்து அவசரமுடிவுகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். நிதானமாகச் செயல்பட வேண்டிய காலம் இது.

மொத்தத்தில் இந்த 2023-ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் நமக்கு நல்லது நினைப்பவர் யார்... பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிபவர் யார் என்பதை உணர்த்தி லட்சியங்களை நினைவூட்டி வாழ்வில் முன்னேற வைக்கும் எனலாம்.

No comments:

Post a Comment