Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 25, 2023

சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதில் புழுங்கலரிசி சோறுதான் சாப்பிட வேண்டுமா?

Add This Number In Your Whatsapp Groups -6379884356
எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. இந்த நோய் வந்தது முதல் காலையில் கேழ்வரகு சேர்த்த உணவும், இரவில் சப்பாத்தியும்தான் சாப்பிடுகிறேன்.

ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு குறையவே இல்லை. கேழ்வரகும் கோதுமையும் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு குறையாதது ஏன்? நீரிழிவு நோயாளிகள் பச்சரிசி சாப்பிடலாமா.... புழுங்கலரிசிதான் சிறந்ததா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
 

சர்க்கரைநோயாளிகளைப் பொறுத்தவரை கலோரி அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். கலோரி அதிகமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். எனவே, உடலுக்குத் தேவையான அளவு கலோரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு எனர்ஜியும் கிடைக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்காமல் இருக்கும்.

சர்க்கரைநோயாளிகளின் உணவில் 50 சதவிகிதம்தான் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளாக இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்று சொல்ல காரணமே அவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துதான். அரிசி மற்றும் கோதுமையோடு ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து அதிகம்.
பாரம்பர்ய அரிசி வகைகள்

சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்றாலும் இவற்றைக் குருணை குருணையாக உடைத்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது. மாவாகத் திரிக்கும் போது இவற்றிலுள்ள நார்ச்சத்து அழிந்துவிடும். நார்ச்சத்து இல்லாத மாவுச்சத்து சாப்பிடும்போது அதனால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

உங்களைப் போல நிறைய பேர், `நான் கேழ்வரகுதான் டாக்டர் சாப்பிடறேன்... ஆனாலும் சுகர் குறைய மாட்டேங்குது' என்பார்கள். `எப்படி சாப்பிடறீங்க' என்று கேட்டால் கஞ்சியாக சாப்பிடுவதாகச் சொல்வார்கள். அதுதான் தவறு. சிறுதானியங்களை அப்படியே சோறு போல சமைத்து சாம்பார், ரசம், காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ரவை போல உடைத்து உப்புமா, கிச்சடி போல செய்து சாப்பிடலாம். கோதுமையில் செய்யப்படுகிற சப்பாத்தி, தோசையிலும் சரி, அரிசி சாதத்திலும் சரி ஒரே அளவிலான சர்க்கரைதான் இருக்கும். எனவே நார்ச்சத்துள்ள தானியங்கள்தான் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தவை
.

அந்த வகையில் பச்சரிசியில் நார்ச்சத்து மிக மிகக் குறைவு. புழுங்கல் அரிசியில் நார்ச்சத்து ஓரளவு அதிகம். பாரம்பர்ய அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி போன்றவற்றில் இன்னும் அதிகம். அதற்காக ஒரு கப் கறுப்பு கவுனி அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்துக்குப் பதில் இரண்டு கப் சாப்பிடுவதும் தவறு. அரிசியின் அளவும் முக்கியம், அது என்ன அரிசி என்பதும் முக்கியம். அதற்கேற்ப உங்கள் உணவுத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

No comments:

Post a Comment

Popular Feed