Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 17, 2023

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோப்புகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளும் எளிதாகின. இப்போது கேமராவைப் பயன்படுத்தி கணிதச் சமன்பாடுகளைக்கூடத் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ‘போட்டோமேத்’ (PhotoMath) செயலி மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது!

கூகுள் தயாரிப்பு: கணிதம் மாணவர்களுக்கு பாகற்காய் போல கசக்கும் என்பது பொதுவான மனநிலை. அடுக்கடுக்கான கணக்குகளைப் பார்த்து மலைத்துப் போவோர் உண்டு. ஆனால், கணிதக் கற்றலை எளிமையாக்கி இருக்கிறது ‘போட்டோமேத்’ செயலி. குரோஷியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பம்சத்தைப் பார்த்த கூகுள் நிறுவனம், கடந்த 2022இல் விலைக்கு வாங்கியது. ‘போட்டோமேத்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.

அடிப்படைக் கணிதக் கணக்குகள் முதல் வடிவியல், இயற்கணிதம், கால்குலஸ் வரை பல கணக்கு முறைகளையும் ‘போட்டோமேத்’ செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். செயலியின் கேமராவில் கணிதக் கேள்வியைப் படம் பிடித்து பதில் கேட்டால், நொடிப்பொழுதில் விடைகளைத் தருகிறது ‘போட்டோ மேத்.’ ஒரு கணக்கின் முதல் பகுதியில் தொடங்கி படிப்படியாக விளக்கி, இறுதியில் விடை தருவதால், மாணவர்கள் எளிதாகக் கணக்கைப் புரிந்துகொள்ள முடியும். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘போட்டோமேத்’, கணக்குப் பாடம் படிப்பதற்கென அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. உலக அளவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இச்செயலி வழியே கணிதம் பழகுகின்றனர்.

குறிப்பு எடுக்கலாம்: கற்றுக்கொள்ள மட்டுமல்ல, கற்பிக்கவும் ‘போட்டோமேத்’ பயன்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்களும் திறன்பேசி வாயிலாக பிள்ளைகளுக்குக் கணிதப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். கணிதக் கணக்குகளை கேமராவில் படம் பிடித்து பதில் கேட்கலாம் அல்லது ‘போட்டோ மேத்’ செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கால்குலேட்டர் வசதியைப் பயன்படுத்தலாம். கணக்குகளை அதில் பதிவிடுவதன் மூலம் ‘போட்டோமேத்’ அதற்கான பதில்களைத் தரும். செயலியில் பதிவுசெய்யப்படும் கணக்குகளை ‘புக்மார்க்’ வசதி மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

தேவையிருப்பின் சேமித்து வைத்த கணக்குகளை மீண்டும் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். கணக்கு முறைகளைப் புரிந்துகொண்டு படித்தால் கணிதம் எளிது. ‘போட்டோமேத்’ செயலியைப் பயன்படுத்தி சந்தேகங்களை விளக்கிப் புரிந்துகொள்ளலாமே தவிர, வீட்டுப் பாடம் முடிக்க அல்லது ‘காப்பி’ அடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது தவிர, கூடுதலாக காணொளி வழி விளக்கங்களுக்கும், கணிதம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் ‘போட்டோமேத் பிளஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். எனினும் பெரும்பாலான பாடங்கள் அடிப்படை ‘போட்டோமேத்’ செயலி யிலேயே கிடைப்பதால் கணிதப் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது இச்செயலி.

No comments:

Post a Comment

Popular Feed