நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் அதனை போக்கவும் முக்கிய பங்கு வகிப்பது கீரைகள்.
அந்தவகையில் மணத்தக்காளி கீரையை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக வாய்ப்புண், வயிற்றுப்புண் பிரச்னையை தடுக்க பயன்படுத்தியுள்ளார்கள். மணத்தக்காளி கீரை தமிழகமெங்கும் பரவலாக காணப்படும் தாவரமாகும்.
இதில் அடர்ந்த இலைகள், சிறிய தக்காளி வடிவலான பழங்கள் மற்றும் வெள்ளை நிற பூக்கள் காணப்படும். இதில் காணப்படும் பழங்களின் நிறத்தின் அடிப்படையில் கருப்பு மணத்தக்காளி, சிவப்பு மணத்தக்காளி என இருவகையாக மணத்தக்காளி அழைக்கப்படுகின்றது. இவற்றில் காணப்படும் இலை, காய், பழங்கள் மற்றும் வேர் என அனைத்து தாவர பகுதிகளுமே
மருத்துவபண்பு கொண்டவையாக திகழ்கிறது.
மணத்தக்காளி கீரையின் தாவரவியல் பெயர்:
சொலானம் னநக்ரம் (solanum nisrum)மணத்தக்காளி கீரை சொலானேஷிய எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை, இக்கீரை ஆரம்பகாலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டாலும் இன்று பரவலாக இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இது ஒரு களைச் செடியாகவே கண்டுரைக்கப்பட்டாலும் பின்னர். இது ஒரு மூலிகைச் செடியாகவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மணத்தக்காளி கீரையில் காணப்படும் மிளகு வடிவிலான பழங்களின் காரணமாக இதனை மிளகுத்தக்காளி எனவும் மணம் கொண்ட இதன் பழங்களின் அடிப்படையில் மணத்தக்காளி எனவும் பழங்களின் அமைப்பு மணி போன்று இருப்பதினால் மணித்தக்காளி எனவும் அழைக்கப்படுகின்றது. மணத்தக்காளி கீரைக்கு சுக்குட்டி கீரை என்ற வேறு பெயரும் உண்டு.
மேலும், இக்கீரையை வட்டார வழக்கில் உலகபாதம், விடைக்காந்தம், வாயசம், காகமா எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
மணத்தக்காளியில் காணப்படும் சத்துகள் மற்றும் தாவர மூலக்கூறுகள்:
மணத்தக்காளி கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், நீர்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. மேலும் சொலானைன், சொலாமார்ஜின், சொலாவினலைன், சொலாசோடின், கேட்சின், ரூட்டின், கேம்ப்பெரால், குமாரின், பைட்போஸ்டிரால் உள்ளிட்ட மூலக்கூறுகள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன. இத்தகைய மூலக்கூறுகள் மற்றும் சத்துக்களே இதன் மருத்துவ பண்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.
மணத்தக்காளியின் மருத்துவ பண்புகள்:
அதிக காரம், துரித உணவுகள், காலை நேர உணவினை தவிர்த்தல், நேரம் தவிர்த்து சாப்பிடுதல், போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் வயிற்றுப்புண் மற்றும் தீவிர அல்சர் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தவிர்க்க வாரம் இருமுறை மனத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு மேற்கூறிய பிரச்னையை தடுக்கலாம்.
மணத்தக்காளி கீரை நுரையிரல் செயல்பாட்டினை மேம்படுத்தவும், காசநோய் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாகவும் திகழ்கிறது.
அதிக உப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், போதிய நீர் அருந்தாமை போன்ற காரணங்களினால் ஏற்படும் சிறுநீரகப் பிரச்னையை சரி செய்யவும் மணத்தக்காளி கீரை பயன்படுகின்றது. கருப்பை புற்றுநோயைத் தடுக்கவும், செரிமானப் பாதையில் ஏற்படும் புற்று செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் மணத்தக்காளி கீரை திகழ்வதாக ஆய்வுத் தரவுகளில் கூறப்பட்டுள்ளன.
மேலும் இருமல், இரைப்பு, மலச்சிக்கல், இதயநோய் போன்றவற்றை தடுக்கவும். முகப்பரு நீக்கி சரும பொலிவினை மேம்படுத்தவும் மணத்தக்காளி கீரை உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்பா ட்டில் வைக்கவும், ரிங்வார்ம் தொற்றுக்கு மருந்தாகவும் மேலும் நல்ல தூக்கத்தையும், கண் பார்வைக்கு சிறந்தவையாகவும் மணத்தக்காளி கீரை திகழ்கிறது. மணத்தக்காளியின் சிறப்பினை பதார்த்த குணப்பாடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடல்
மணத்தக்காளியின் குணம்
வெவ்வெழலு மாறும் விரிகுறர்க்கம் மற்போடி
மொல்ல சிசுவுக்கா மூலவையிடுஞ்- செவ்வி
யருமணிக் கச்சுமுலை யாயிழையே கேளாய்
கருமணத் தக்காளிதனைக் கண்டு.
மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல்புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும். மேலும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.
மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும். மேலும் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்..
No comments:
Post a Comment