Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 6, 2024

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதை விடவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பது நல்லது.

நமது இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படிப்பதை விட வெளிநாட்டில் டாக்டருக்கான எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படிப்பது நல்லது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அது எந்த விதத்தில் இந்திய மாணவர்களுக்கு நன்மையைச் செய்கிறது. அதனால் ஏற்படும் பலன்கள், பிரச்சினைகள் என்ன என்பது குறித்தும் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர்.

இந்திய மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் எம்பிபிஎஸ் படிப்புகளைப் பயில நீட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது அவசியமாகிறது. நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இதை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

என்டிஏ (NTA -National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்து வந்து தற்போது மாற்றப்பட்டது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் போதுமான மதிப்பெண் கிடைக்காத மாணவ, மாணவிகள் இந்தியாவிலுள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதாவது படிப்பு முடித்து விட்டு வரும்போது சுமார் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்த படிப்புக்காக செலவிட வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பல மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்குச் சென்று எம்பிபிஎஸ் படிப்பைப் படிக்கின்றனர். ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐந்தரை ஆண்டுகள் வரை படிக்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மட்டுமே செலவாகிறது. படிப்புக் கட்டணம், தங்கும் கட்டணம், உணவுக் கட்டணம் அனைத்தையும் சேர்த்த செலவாக இது உள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பதே மிகவும் சாத்தியமான விருப்பமாக உள்ளது.. வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பு என்றாலே மாணவச் செல்வங்களின் நினைவுக்கு வருவது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள்தான்.

ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிப்பு என்பது இந்திய மாணவர்களிடையே மிகவும் பிரபலமான விருப்பமாக உள்ளது.. ரஷ்யாவிலிருந்து MBBS படிப்பின் கட்டண அமைப்பு செலவு குறைந்ததாக உள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை நமக்கு வழங்குகின்றன.

ரஷ்யாவில் MBBS படிப்புக்கான கட்டணம் சில கல்லூரிகளில் ரூ. 9 லட்சம் என்ற அளவில் உள்ளது. மேலும் சில கல்லூரியைப் பொறுத்து ரூ.25 லட்சம் வரை என்று உள்ளது. ரஷ்யக் கல்லூரிகளில் கல்வியாண்டு செப்டம்பரில் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும்.

எனவே, பலர் ரஷ்யா, சீனா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று எம்பிபிஎஸ் படித்துவிட்டு இந்தியா வருகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்தபின்னர், எஃப்எம்ஜிஇ (Foreign Medical Graduates Examination -FMGE) என்ற தேர்வை எழுதி இங்கேயே டாக்டராக பணிபுரிகின்றனர். இந்தத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) நடத்துகிறது.

எனவே, அதிக கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் மாணவச் செல்வங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படிப்பதை விட வெளிநாட்டில் டாக்டருக்கான எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படிப்பது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர். அதற்கு படிப்புக்கு ஆகும் குறைந்தபட்ச செலவு, உலகளாவிய வெளிப்பாடு, ஆராய்ச்சி வாய்ப்புகள், சர்வதேச அங்கீகாரம், மொழிப் புலமை, வெளிநாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு, தரமான மருத்துவக் கல்வி, வெளிநாடுகளில் வேலை என்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

அதற்கான காரணிகள் பின்வருமாறு:

மருத்துவக் கல்வியின் தரம் வெளிநாடுகளில் உள்ள சில மருத்துவப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், மிகச் சிறந்த மற்றும் உயர்தர மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெரும்பாலும் மேம்பட்ட வசதிகள், அனுபவம் வாய்ந்த மூத்த பேராசிரியர்கள் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளனர். இதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களை ஈர்க்கின்றன.


உலகளாவிய வெளிப்பாடு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பது மாணவர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெளிநாட்டில் படிப்பது பல்வேறு சுகாதார அமைப்புகள், கலாச்சாரங்கள் மற்றும் மருத்துவ நடைமுறைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது என்றே சொல்ல வேண்டும். இது ஒரு மாணவர் அல்லது மாணவியின் மருத்துவப் பிரிவில் அடுத்தகட்ட நகர்வை விரிவுபடுத்துகிறது. மேலும் அவர்களது மருத்துவ திறன்களை மேம்படுத்துகிறது என்பதே உண்மை. இந்த உலகளாவிய வெளிப்பாடு மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று மாணவர்கள் நம்புகின்றனர்.

பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகள் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளும் கிடைக்கின்றன. பல வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வலுவான ஆராய்ச்சித் திட்டங்களையும், புகழ்பெற்ற நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளன. இதனால் மாணவர்கள் அந்த புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுப முடியும். மேலும் மாணவர்களுக்கு அதிநவீன ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்கவும் மதிப்புமிக்க ஆராய்ச்சி அனுபவத்தைப் பெறவும் வாய்ப்புகளை அந்த சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.

சர்வதேச அங்கீகாரம் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் மருத்துவ பட்டங்கள் பெரும்பாலும் உலகளவில் அங்கீகரிக்கப்படுகின்றன, இது படிக்கும் நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எம்பிபிஎஸ் படிக்கும்போது அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் உள்ள பிரபலமான மருத்துவமனைகள் அவர்களை போட்டி போட்டுக் கொண்டு வேலைக்கு அழைக்கின்றன. மேலும் அந்த எம்பிபிஎஸ் முடிக்கும் மாணவர்கள், அந்தக் கல்லூரியிலேயே வேலை பார்ப்பதற்கான வாய்ப்பும், சாத்தியமும் அமைந்து விடுகிறது.

மொழி புலமை வெளிநாட்டில் படிக்க வெளிநாட்டு மொழியில் புலமை தேவைப்படலாம், இது இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக கூடுதல் நன்மையாக இருக்கலாம். இங்குள்ள மாணவர்கள் அங்கு சென்று எம்பிபிஎஸ் பயிலும் அவர்கள் நாட்டு மொழி, கலாச்சாரம், வட்டார மொழிகள் ஆகியவற்றையும் எளிதில் கற்றுக்கொண்டு அங்குள்ள நாட்டு மக்கள் போலவே மாற முடியும்.

குடியிருப்புக்கான சாத்தியம் அமெரிக்கா போன்ற சில நாடுகள், சர்வதேச மருத்துவ பட்டதாரிகளுக்கு உயர்கல்வி பயிற்சித் திட்டங்களைத் தொடர வாய்ப்புகளை வழங்குகின்றன, இது நிபுணத்துவம் மற்றும் மேலும் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே, அந்தப் படிப்புகளைப் படித்து அங்கு பணிபுரியும்போது அவர்கள் அங்கேயே தங்கி குடியேறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன.


குறைந்த செலவு

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பது அதிக செலவு வைப்பதாக இருக்கும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விடவும் ரஷ்யா, ஜார்ஜியா, உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட பிற நாடுகளிலும் செலவு குறைந்த அளவிலேயே படித்து முடிக்கும் வகையிலான எம்பிபிஎஸ் கல்லூரிகள் சில சமயங்களில், வெளிநாட்டில் படிப்பதற்கான மொத்தச் செலவு இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடக்கூடியதாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ கூட இருக்கலாம். எனவே, குறைந்த அளவு பணம் வைத்துக்கொண்டு எம்பிபிஎஸ் படிக்க நினைக்கும் மாணவச் செல்வங்கள் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு இங்கு வந்து மருத்துவச் சேவை புரியலாம்.

அதே நேரத்தில் அவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அவர்கள் இந்தியாவுக்கு வந்தபின்னர், எஃப்எம்ஜிஇ (Foreign Medical Graduates Examination -FMGE) என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களால் இங்கு எம்பிபிஎஸ் டாக்டராக பணிபுரிய முடியும். அதை அவர்கள் நினைவில் கொள்வது நல்லது.

இருக்கைகள் அதிகம் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த அளவிலேயே மருத்துவ இடங்கள் உள்ளன. மேலும் அவை, அதிக கல்விக் கட்டணங்களுடன் அதிக போட்டித்தன்மை கொண்டதாக உள்ளன. எனவே, அனைவராலும் சேர்ந்து எம்பிபிஎஸ் படிக்க முடியாத நிலை உள்ளது.

ஆனால், வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பது அவர்கள் அந்தப் படிப்பில் சேர்வதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கலாம். குறிப்பாக ஒரு புகழ்பெற்ற இந்திய மருத்துவக் கல்வி உயர் நிறுவனத்தில் இடம் பெறாத மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று எளிதாக பயில முடியும்.

இருப்பினும், வெளிநாட்டில் MBBS படிப்பது, ஒரு புதிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், வேறுபட்ட சுகாதார அமைப்புடன் சரிசெய்து கொள்ளுதல், மொழித் தடைகளைக் கையாள்வது மற்றும் குடும்பம் மற்றும் ஆதரவு நெட்வொர்க்குகளிலிருந்து விலகி இருப்பது போன்ற சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

கூடுதலாக, பயிற்சிக்காக இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு சில உரிமம் மற்றும் சான்றிதழ் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கலாம், அவை படிக்கும் நாட்டைப் பொறுத்து மாறுபடும். வருங்கால மாணவர்கள் முடிவெடுப்பதற்கு முன், அங்கு சென்று பயில்வதற்கான சாதக, பாதகங்கள், நன்மை தீமைகளை முழுமையாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment