நான்காண்டுகள் இளநிலை பட்டப்படிப்பு (Undergraduate education) முடித்த மாணவர்கள், நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பான PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண் அல்லது அதற்கு சமமான கிரேட் பெற்ற மாணவர்கள், நேரடியாக தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test - NET) தேர்வு எழுதவும், பிஹெச்.டி படிக்கவும் இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முனைவர் படிப்புக்கு முதுநிலை படிப்பு (Post Graduation) கட்டாயம் என்றிருந்தது. அதேபோல, தேசிய தகுதித் தேர்வுக்கு முதுநிலை படிப்பை நிறைவு செய்து, அதில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது இந்த விதிமுறைகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பானது, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நான்கு ஆண்டுக்கால இளநிலை படிப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. 8 செமஸ்டர்கள், 4 ஆண்டுக்கால இளநிலை கல்வியைக் கற்போர், குறைந்தபட்சமாக 10-க்கு 7.5 சி.ஜி.பி.ஏ மதிப்பெண் (CGPA - Cumulative Grade Point Average) வைத்திருக்க வேண்டும்.
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF) உடன், அல்லது அது இல்லாமலேயே பிஹெச்.டியை தொடர, விண்ணப்பதாரர்கள் நான்கு ஆண்டுகள் இளங்கலைப் படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண், அல்லது அதற்கு சமமான மதிப்பெண், கிரேட் பெற்றிருக்க வேண்டும்.
இதில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் கூடுதலாக 0.5 % தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பிரிவில் மட்டுமல்லாமல், வேறு எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் இவ்வருடத்துக்கான புதிய நெறிமுறைகளில் தளர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தத் தளர்வின் கீழ் முனைவர் பட்டத்துக்கு படிப்போர், தங்களின் ஆய்வுக் கட்டுரையைக் காப்புரிமையின் கீழ் வரும்படியோ, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகைகளில் அதன் குறியீட்டு எண்ணை (INTERNATIONAL STANDARD BOOK NUMBER - ISBN CODE) மட்டுமே வெளியிட வேண்டும். இதன்மூலம், பிற தளங்களிலிருந்து அக்கட்டுரைகள் திருடப்படுவதைத் தவிர்க்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், "முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வருட இளநிலை படிப்பைக் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஹெச்.டி கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில் சில தளர்வுகள் தரப்படவேண்டியது அவசியமாகிறது. 7.5 -க்கும் குறைவான சி.ஜி.பி.ஏ மதிப்பெண் வைத்துள்ளவர்கள், ஒரு வருடமாவது முதுநிலைப் படிப்பு படித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment