அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை முதலாமாண்டு பட்டய படிப்புகளுக்கு 12,582 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், பகுதி நேர பட்டயப் படிப்புகளுக்கு 191 பேரும், நேரடி 2-ம் ஆண்டு படிப்பில் சேர 12,043 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டை விட தற்போது விண்ணப்பப் பதிவு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 24) நிறைவு பெறுவதாக இருந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப் பட்டு சேர்க்கை நடத்தப்படும். மேலும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment