Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2024

“நீட் கவுன்சிலிங் தொடங்க தடை இல்லை” - உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக சுமார் 10 பேர் கடந்த ஜூன் 1-ம் தேதி வழக்கு தொடுத்தனர். தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மேலும், சிலர் இது தொடர்பாக வழக்கு தொடுத்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து இதனை விசாரித்தனர்.

தேசிய அளவில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். இதில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. தவிர, நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் பலருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதும் நீட் தேர்வு முடிவுகள் குறித்து தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்தது. இந்தத் தேர்வின் நோக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அதற்கான பதிலை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். அந்த வகையில் விளக்கம் கேட்டு என்டிஏ-வுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.

அதே நேரத்தில் கவுன்சிலிங் தொடங்கலாம் என்றும். நாங்கள் கவுன்சிலிங்கை நிறுத்தவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி என்ன? எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் மருத்துவ கல்வி சார்ந்த படிப்புகளை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் பயில நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு ஆண்டில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடு காரணமாக மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. மேலும், வினாத்தாள் கசிவு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போன்றவற்றையும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அவர்கள் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் வாதாடினார். அப்போது நீதிபதிகளிடம் கவுன்சிலிங் நடத்த தடை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது.

No comments:

Post a Comment