Tuesday, July 9, 2024

தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு: ஜூலை 18 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?


தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18 முதல் 24-ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு இணையம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

தேர்வுக் கட்டணம் - ரூ.125,

இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70

மொத்தம் - ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ஆம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன், தட்கல் கட்டணத் தொகையாக ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை

முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி பதிவுத் தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள்

இவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்துத் தனித்தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின் கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்."

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News