Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 15, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்குமாறு மூன்று ஆசிரியர்கள் வழக்கு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரமேஷ் , சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் யுவகுமார், தேவராஜூலு ஆகிய 3 பேர் 2003ம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன்கள் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜன. 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. இதே பாணியில் தமிழக அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டது.

உதாரணமாக ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆக இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற்று வருகிறார். இதுமட்டுமின்றி அக விலைப் படிக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் தான் நடைமுறையில் இருக்கிறது. இது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினமாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை விட மிக குறைவாகவே உள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது என்பது முக்கியமான விஷயம் ஆகும். இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்நிலையில் பழைய ஓய்வூதியத்தில் சேர்க்கக்கோரி அரசு ஆசிரியர்கள் 3 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுபற்றி பார்ப்போம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், "சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு 2001-ம் ஆண்டு முடிவு எடுத்து, 2003-ம் ஆண்டு தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று தெலுங்கு மொழி ஆசிரியராக 21-8-2003 அன்று நியமனம் செய்யப்பட்டேன்.

இந்த சூழலில், தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003 அன்று முதல், அதாவது முன்தேதியிட்டு ரத்து செய்து அதே ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. இதனால், என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறது. ஆனால், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே தேர்வு நடவடிக்கை தொடங்கி விட்டது. எனவே என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தும் அரசு பரிசீலிக்கவே இல்லை" இவ்வாறு கூறியிருந்தார்.

இதேபோல, சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் யுவகுமார், தேவராஜூலு ஆகியோரும் இதேபோல் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, "இதுபோன்ற ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்கவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி மனுதாரர்களின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 2 வாரத்துக்குள் தகுந்த முடிவை அரசு எடுக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment