Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 19, 2025

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை உறுதி - மத்திய அமைச்சர் திட்டவட்டம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) நிதியை ஒதுக்க இயலாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, பாமக, தவாக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் பதில் அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது என்பது எனக்கு தெரியும். மாணவர்களிடையே போட்டியையும், ஒரு சமமான நிலையையும் உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்துக்கு வர வேண்டும். அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கை என்பது புதிய லட்சிய பொதுத் தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

தேசிய கல்விக்கொள்கை தமிழக மாணவர்கள் மீது இந்தியையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியையோ திணிக்காது. அதேநேரத்தில் தமிழக மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்பதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை விருப்பம் போல் கற்கலாம். அவர்கள் இந்தியை அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

தேசிய கல்விக்கொள்கையை வைத்து தமிழகத்தில் சில நண்பர்கள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் ஒருசில நிபந்தனைகள் மட்டும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News