Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 4, 2025

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் மிகவும் ஆபத்தானது - இந்து தமிழ் திசை கட்டுரை.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.

​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.

ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூ​தியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான ஓய்வூ​தியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்​தான். புதிய ஓய்வூ​தியத் திட்டத்தில் உள்ளவர்​களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வு​பெற்று​விட்​டனர். சராசரியாக 8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூ​தி​ய​தா​ரர்​களில் இது ஒரு சதவீதம்​தான். ஓய்வூ​தியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு சதவீதம்​தான்.

அதாவது ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும். இதனை அரசு கையிலிருக்கும் நிதிய வட்டியான ரூ.2,590 கோடியி​லிருந்து ஈடுகட்​டலாம். ஆனால், அதைச் செய்யாமல் பழைய ஓய்வூ​தியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்​வதற்குக் குழு அமைக்​கப்​படுவதை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்​சுவதுபோல ஊழியர்கள் உணர்கின்​றனர். மேலும், அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்​திருப்​பதும் அதிருப்தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.

தமிழக அரசு செய்யும் தவறு: மத்திய அரசு ஊழியர்​களுக்கு இருக்கும் புதிய ஓய்வூ​தியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்​படுத்​தவில்லை. மத்திய அரசு ஊழியர் மறைந்​தால், அவரது குடும்பத்​துக்குப் பழைய ஓய்வூதிய விதிகளில் உள்ள குடும்ப ஓய்வூ​தி​ய​மும், இறப்புப் பணிக்​கொடையும் வழங்கப்​படு​கின்றன. ஊனமுற்று விருப்ப ஓய்வில் சென்றால் பழைய ஓய்வூதிய விதிகளில், ‘இன்வேலிட்’ ஓய்வூ​தி​யமும் பணிக்​கொடையும் கிடைக்​கின்றன.

ஓய்வு​பெறு​பவருக்குப் பணிக்​கொடையும் ‘ஆனுவிட்டி’ (ஆண்டுத் தொகை) வடிவில் மாதந்​தோறும் உத்தர​வாதம் இல்லா​விட்​டாலும் ஓர் ஓய்வூ​தியம் கிடைக்​கிறது. அரசுப் பங்களிப்பு 14% கிடைக்​கிறது. ஓய்வு​பெற்றால் 60% எடுத்​துக்​கொள்​ளலாம். 40% ஆனுவிட்​டியில் போட்டு, இறந்தபின் அந்த 40% குடும்பத்​துக்குத் திரும்பக் கிடைக்​கும். தமிழக அரசு இதில் எதையும் செய்யாமல் மொத்தத் தொகையையும் கொடுத்து அனுப்பு​கிறது.

கடந்த 2024 மே மாதம் வரை ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்​களால் 38,129 பேர் பணியில் இல்லை. மாதந்​தோறும் ஒரு தொகை கிடைக்​காத​போது, அதைப் பங்களிப்பு ஓய்வூ​தியம் என்று சொல்வதில் அர்த்​தமில்லை. பணிக்​கொடைச் சட்டப்படி அனைவருக்கும் பணிக்கொடை தந்தாக வேண்டும்.

பழைய ஓய்வூ​தியப் பலன்கள்: ஆனாலும் புதிய ஓய்வூ​தியம் பழைய ஓய்வூ​தி​யத்​துக்கு ஈடாகாது. பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்​திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கிறது. கம்யூட்​டேஷன், குடும்ப ஓய்வூ​தி​யமும் கிடைக்​கிறது. குறைந்தபட்ச ஓய்வூ​தியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்​கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூ​தியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.

இதற்காக நடத்தப்பட்ட பலகட்டப் போராட்​டங்​களுக்குப் பிறகு, உத்தர​வாதமான 50% ஓய்வூ​தியம்; அதில் 60% குடும்ப ஓய்வூ​தியம்; குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000; அகவிலைப்​படியும் உண்டு எனக் கூறி ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு​வந்தது. அது ஓய்வூதிய முறையின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்கு​கிறது. ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​தில், ஊழியரின் 10 சதவீதத்தோடு அரசும் 10% தரும். இரண்டும் சேர்ந்து ‘தனிநபர் கார்பஸ்’ ஆகும். அரசு போடும் 8.5% ‘பூல் கார்பஸ்’ எனப்படும். தனிநபர் கார்பஸ் சந்தையில் முதலீடு செய்யப்​படும். இந்த முதலீட்டுத் தொகைக்கு உத்தர​வாதமில்லை.

ஓய்வு பெறும்போது ஊழியரின் தனிநபர் கார்பஸ் முழுமையாக இருக்க வேண்டும். நடுவில் பணம் எடுக்​காமல், ஒழுங்கான நேரத்தில் கட்டி, சந்தை நிலையாக இருந்தால் உங்கள் கார்பஸ் என்னவாக இருக்குமோ அதற்கு ‘பெஞ்ச்​மார்க் கார்பஸ்’ என்று பெயர். இதனை பி.எஃப்​.ஆர்​.டி.ஏ.தான் தீர்மானிக்​கும். அதற்கு ஒரு வரையறையும் இல்லை என்பது கவனிக்​கத்​தக்கது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்: ஓய்வு பெறும்போது பணிக் காலம் 25 ஆண்டுகள் இருந்​தால், நேராக 12 மாத சராசரி சம்பளத்தின் 50% ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​காது. தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். தனிநபர் கார்பஸ் முழுவதையும் அரசின் பூல் கார்பஸுக்குத் தாரை வார்க்க வேண்டும். அது திரும்பக் கிடைக்​காது. அப்போதுதான் 50% ஓய்வூ​தியம் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், அதே விகிதத்தில் ஓய்வூ​தி​யமும் குறையும். தனிநபர் கார்பஸ் சந்தையில் வீழ்ந்து​விட்டால் உங்கள் ஓய்வூ​தி​யமும் வீழ்ந்து​விடும் அபாயம் உண்டு.

ஓய்வு பெறும்போது பணிக்​காலம் 10 ஆண்டுகள் என்றால் சம்பளத்தில் 20%தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும். குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000 என்பது தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருந்​தால்தான் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், குறைந்தபட்ச ஓய்வூ​தியமான 10,000 கிடைக்​காது. தனிநபர் கார்பஸிலிருந்து 60% எடுத்​துக்​கொள்​ளலாம். ஆனால், உங்கள் ஓய்வூ​தியம் 60% குறைந்து​விடும். அதாவது, ஓய்வூ​தியம் ரூ.10,000 என்றால் அதில் 60% குறைந்து, ரூ.4,000தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும்.

அதேபோல் குடும்ப ஓய்வூ​தியம் 60% என்ற கணக்கின்படி ஓய்வூ​தியம் ரூ.4,000 என்றால், அதில் 60% ரூ.2,400தான் கிடைக்​கும். குடும்ப ஓய்வூ​தி​யத்​துக்குக் குறைந்த​பட்சம் ரூ.10,000 என்கிற உத்தர​வாதம் கிடையாது. எனவேதான், மத்திய அரசு இதனை ஓய்வூ​தியம் என்று குறிப்​பி​டாமல் ‘பே அவுட்’ என்கிறது.

விருப்ப ஓய்வு: விருப்ப ஓய்வு விவகாரத்தில் விநோதமான விதிமுறை சேர்க்​கப்​பட்​டுள்ளது. அதாவது, 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்திருந்​தால்​தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும். இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போது​தான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே அவுட்’ கிடைக்​கும். இப்படி ஒரு விநோத விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி​யுள்ளது.

மத்திய அரசு ஊழியர்​களுக்கு அறிவிக்​கப்​படும் அதே சதவீதத்தில் அகவிலைப்படி கிடைக்​காது. 1.4.2025-க்குப் பின் பூஜ்ஜி​யத்​திலிருந்து தொடங்கு​வார்கள். அகவிலைப்​படியை மத்திய ஆவணப் பாதுகாப்பு முகமைதான் அறிவிக்கும் (central record keeping agency), மத்திய அரசல்ல பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்​பதில் என்னவெல்லாம் புதிய ஓய்வூ​தி​யத்தில் இல்லை என்று ஏற்கெனவே குறிப்​பிட்​டிருக்​கிறோமோ அவை எதுவும் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​திலும் கிடையாது. எனவேதான் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூ​தியத் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்து​கிறார்கள். அரசு இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News