Breaking

Saturday, March 7, 2026

வகுப்பறையில் ஆசிரியரை தாக்கிய மாணவன் - ஆசிரியர்கள் அதிர்ச்சி



ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் பாபுலபாடு பகுதியில் உள்ள வீரவள்ளியில் ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பள்ளி ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார்.

அதோடு சரியாகப் படிக்காததால் மற்ற மாணவர்களுடன் சேர்த்து, இந்த மாணவனையும் வகுப்பு வெளியே உட்கார வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் ஆசிரியரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர் நெஞ்சை பிடித்துக்கொண்ட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக்கண்டு, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவன் மீண்டும் ஆசிரியரைத் தாக்க முயன்றபோது, அருகில் இருந்த மாணவர்கள், அந்த மாணவனை இழுத்துப் பிடித்தனர்.

இதையடுத்து, அந்த மாணவன் இன்னும் சில மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியில் இருந்து வெளியேறினார். பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், ஆசிரியரையே கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மறுபுறம், சம்பந்தப்பட்ட மாணவன் உட்பட மூன்று மாணவர்கள் பள்ளி வளாகத்தில் புகைபிடித்ததாக ஆய்வக உதவியாளர், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment