
பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்கள் முதன்முறையாக டிஜிட்டல் முறையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பிடும் முறையில் கோளாறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷன்யம் பரத்வாஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள்கள் மதிப்பிடும் முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக வரும் செய்தி தவறானது. டிஜிட்டல் முறை மூலம் மதிப்பிடும் பணிகள் சீராகவும், இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சிறப்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மதிப்பிடும் முறையை செயல்படுத்தியதற்காக சிபிஎஸ்இ வாரியம் பெருமை கொள்கிறது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை. எனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி மதிப்பிடும் பணிகள் முடிவடையும். ஏற்கெனவே அறிவித்தபடி மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment