Subscribe Us

Saturday, June 13, 2026

2010ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் விலக்கு - பிரதமருக்கு கடிதம்!!!



2010ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத ஆசிரியர் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைஷிக் மகாசங்கம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த மே 29ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்ததால், நாடு முழுவதுமுள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேதனையும், நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்டுள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்விக்குழு கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் அப்போதைய விதிகள், தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தேச கட்டமைப்பு, தரமான கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்த்தல் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பை செய்து வருகின்றனர்.

எனவே, 2010 ஆகஸ்ட் 23க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், பணி மூப்பு, பதவி உயர்வு மற்றும் பணிகள் சார்ந்த பிற உரிமைகள் உள்ளிட்ட பணிப்பலன்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர தீர்வு காண, தேவைப்பட்டால் சட்ட திருத்தங்கள் அல்லது சிறப்பு ஏற்பாடுகள் செய்தல்,

அத்தகைய ஆசிரியர்களின் பணி நிலை குறித்த நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற உணர்வை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தௌிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed